Thursday, July 23, 2009

தாராளமயம் மீண்டும் அதன் பாதையில்...

ஆர்.கோவிந்தராஜன்

இடதுசாரிகளை சார்ந்து நிற்கவேண்டிய அவசியமில்லை என்பதால் புதிய அரசு கடந்த காலத்தில் கொண்டுவர விரும்பிய, ஆனால் இடதுசாரிகளால் தடுக்கப்பட்ட சீர்திருத்தங்களை கொண்டுவரும் வேகம் தெரிகிறது. அண்மையில் நாடாளுமன்றத்தின் முன் அளிக்கப்பட்ட பொருளாதார ஆய்வறிக்கை, ஆளும் வர்க்கத்தின் உள்ளக்கிடக்கையினை தெள்ளெனக் காட்டுகிறது. நவரத்னா உள்ளிட்ட பொதுத்துறைகளின் 10 சதம் பங்குகளை விற்பது, பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு, மண்ணெண்ணெய் ஆகியவைகளுக்கு கொடுக்கப்படும் மானியம் நீக்கப்படுவது, காப்பீட்டுத்துறை, பாதுகாப்பு உற்பத்தி துறைகளில் 49 சதம் அந்நிய மூலதனம் அனுமதி, நிலக்கரி சுரங்கம், எண்ணெய் வயல்கள் நாட்டுடைமையிலிருந்து தனியுடைமைக்கு மாற்றப்படுவது, ஆட்குறைப்பு செய்ய அரசு அனுமதி தேவை என்ற தொழில் தகராறு சட்டப்பிரிவினை நீக்குவது, வாரம் 60 மணி வேலை நேரம் என சட்டமியற்றுவது -இவைகள் போன்ற பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டிருக்கின்றன. தாராளமயம் மீண்டும் அதன் பாதையில் பயணத்தை துவங்குகிறது என ஊடகங்கள் பறைசாற்றுகின்றன. தாராளமயத்தின் விளைவினால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி உலக நாடுகளின் (இந்தியா உட்பட) பொருளாதாரத்தை பாதிப்புக்கு உள்ளாக்கியிருக்கும் நிலையில் தாராளமய சீர்திருத்தங்களுக்கு விரிவான தளம் இங்கு அமைத்துக் கொடுக்கப்படுகிறது. அதே ஆய்வறிக்கைதான் நாட்டின் 60 சதம் மக்கள் தினசரி ரூ.20க்கு கீழே உள்ள வருமானத்தில் வாழ்க்கை நடத்திக் கொண்டி ருக்கிறார்கள் என்றும் கூறுகிறது. அமெரிக்க பொருளாதாரம் சீரடையவில்லையென்றால் இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சி வேகம் தடைபடும் என்றும் அறிக்கை கூறுகிறது.

இந்த அரசு நடைபோட விரும்பும் தாராளமய திசைவழி என்ன, நாட்டில் மக்கள் வாழும் உண்மை நிலை என்ன? எந்த அளவுக்கு அமெரிக்க பொருளாதாரத்தை சார்ந்து நம் நாட்டின் பொருளாதாரம் உள்ளது என்பதையெல்லாம் மறைக்கமுடியாமல், ஆய்வறிக்கை வெளியிட்டிருக்கிறது.

இங்கு தான் உழைக்கும் மக்கள் சந்திக்க வேண்டிய சவால்கள் எழுகின்றன. 15வது மக்களவை தேர்தல் முடிவுகள் ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டிய தேவையினை சுட்டிக்காட்டுவதோடு, நாட்டின் பொருளாதாரத்தை பெரும்பான்மையான மக்களின் தேவைகளை நோக்கி சீரமைக்கப்படவேண்டும் என்றும் வலியுறுத்துகிறது. இடதுசாரிகளின் பலம் நாடாளுமன்றத்திற்கு உள்ளே குறைந்திருப்பது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு அகங்காரத்தை உள்ளடக்கிய மகிழ்ச்சியாக இருக்கும் என்பதுஉண்மை, அரசின் கொள்கை பிரகடனங்களின் முடிவுகளில் வெளிப்படும் என்பது உண்மை, அனைவரின் எதிர்ப்பையும் மீறி பெட்ரோல், டீசல் விலையேற்றம் அதற்கு ஒரு உதாரணமாக இருக்கிறது. ஆகவே நாடாளுமன்றத்திற்கு வெளியே மக்களை திரட்டி நடத்தவேண்டிய போராட்டத்திற்கு களம் அமைக்க வேண்டிய பணி உழைக்கும் மக்கள் முன்பு உள்ளது. தேர்தலில் வெளியான வாக்கு விகிதங்களை வைத்துப்பார்த்தால் கூட ஆளும் வர்க்க நலன்களை பிரதிபலிக்கும் கட்சிகளுக்கு எதிரான அரசியல் களம் விரிவாகத்தான் உள்ளது. அதை பயன்படுத்த வேண்டிய அரசியல் தேவை உள்ளது. சோர்வு நீங்கி களம் காணும் உறுதியினை தொழிலாளி வர்க்கம் பெறவேண்டும்.

நன்றி : சங்கக்குரல்

No comments: