Saturday, November 20, 2010

உலகமயத்தின் உப விளைவுகள்

அமெரிக்கா உள்ளிட்ட ஏகாதிபத்திய நாடுகளின் நலன்களுக்காகவே உலகமயக் கொள்கை திணிக்கப்படுகிறது என்பது தெளிவு. இந்தியாவைப் பொறுத்தவரை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு இந்தக் கொள்கைகளை செயல்படுத்துவதில் மும்முரமாக உள்ளது. அதனுடைய பாதகமான விளைவு அனைத்துத் துறைகளிலும் வெளிப்பட்டு வருகிறது.


முன்பேர வர்த்தகம் எனப்படும் மோசடி முறையால் அனைத்து அத்தியாவசியப் பொருட் களின் விலை கடுமையாக உயர்கிறது. இந்த முறையால் ஏழை-எளிய மக்களுக்கு எந்த லாபமும் இல்லை. இதனால் லாபம் பெறுவது முதலாளிகள் மட்டுமே. சிறுவர்த்தகர்களும், பொதுமக்களும் பாதிக்கப்படுகிறார்கள். ஆனால் இந்த முறையை முற்றாக தடைசெய்ய அரசு தயாராக இல்லை.

உலகமயத்தின் உப விளைவுகளில் ஒன்று ஊழல். உலகமயமும் ஊழலும் ஒட்டிப்பிறந்த இரட்டைக்குழந்தைகள். இந்தியாவில் பாஜக ஆட்சிக்காலத்தில் நடந்த பங்குச்சந்தை ஊழல் துவங்கி இன்றைக்கு நாறிக்கொண்டிருக்கும் 2-ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு, காமன்வெல்த் ஏற் பாடுகளில் நடந்த ஊழல், ஆதர்ஷ் அடுக்குமாடி குடியிருப்பு ஒதுக்கீட்டில் நடந்துள்ள ஊழல் போன்ற அனைத்துவிதமான ஊழல்களின் தாயாக உலகமய, தனியார்மய, தாராளமய கொள்கைகள் உள்ளன என்பதை மறுக்க முடியாது.

இந்த கொள்கைகளை பொறுத்தவரை பாஜக, காங்கிரஸ் மற்றும் இவற்றின் கூட்டாளிக்கட்சி கள் ஒரே மாதிரியான அணுகுமுறையையே பின்பற்றுகின்றன. ஊழல்கள் வெடித்துக் கிளம்பி வெளிவரும்போது, முதலாளித்துவக் கட்சிகள் ஒன்றையொன்று பரஸ்பரம் குற்றம்சாட்டிக் கொண்டு பிரச்சனையை திசைதிருப்ப முயல் கின்றன. ஊழல் மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்திய மக்களின் வாழ்க்கையையே பெரும் துயரத்தில் ஆழ்த்தவே இந்த நாசகர கொள்கைகள் வழிசெய்கின்றன.

இந்தியாவில் மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளிலும் உலகமயக்கொள்கை தன்னுடைய திருவிளையாடலை நடத்தி வருகிறது. கடுமை யான பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள அமெரிக்காவே இதற்கு முக்கியச் சான்றாகும். வேலையின்மை, வறுமை போன்ற பிரச்சனைகளின் வெம்மை தாங்காமல் இந்தியா உள்ளிட்ட நாடுகளைச் சுரண்டி தன்னுடைய நாட்டை காப்பாற்றும் முயற்சியில் அமெரிக்க அதிபர் ஒபாமா இறங்கியுள்ளார்.

பிரான்ஸ் நாட்டில் உலகமயக் கொள்கையால் பாதிக்கப்பட்டுள்ள தொழிலாளர்கள் தொடர்ந்து வீரஞ்செறிந்த போராட்டத்தை நடத்தி வருகின் றனர். கிரீஸ் உள்ளிட்ட நாடுகளிலும் போராட்டப் பேரலை வீசியடிக்கிறது. இந்த கொள்கைகளின் காரணமாக ஜப்பானில் சிறுவர்த்தகர்கள் தற் கொலை செய்துகொள்வதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின்றன. இங்கிலாந்தில் கல்விக்கட்டணம் கடுமையாக உயர்த்தப் பட்டுள்ளதை எதிர்த்து ஆசிரியர்களும், மாணவர் களும் இணைந்து போராடுகிறார்கள்.

முதலாளித்துவம் முன் நிறுத்தும் இந்த உலகமயக் கொள்கை, பிரச்சனைகளை தீவிரப்படுத்துமே தவிர மக்களுக்கு உதவாது. பீறிட்டு எழும் போராட்டங்கள் இதையே உணர்த்துகிறது.

No comments: