Monday, November 29, 2010

கிராமங்களை குறிவைக்கும் பன்னாட்டு நிறுவனங்கள்

உலகமயத்தின் மூலம் இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் ஊடுருவியுள்ள ஏகாதிபத்தியம் ஏற்கெனவே பல துறைகளில் தனியாட்சி நடத்தி வருகிறது. தற்போது இந்திய கிராமங்களில் தனது கழுகு கண் பார்வையை திருப்பியுள்ளது.

பன்னாட்டு நிறுவனங்களும், பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களும் தங்களின் உற்பத்திப் பொருட்களை நுகரும் சந்தையாக இந்திய கிராமங்களை தயார்ப்படுத்தும் வேலையை செய்து வந்தன. இதில் ஓரளவு வெற்றியும் பெற்றி ருக்கின்றன. அதன் எதிரொலிதான் தற்போது இந்திய கிராமங்களில் காலை உணவுக்கு பதிலாக 33 விழுக்காட்டினர் பிஸ்கெட்டுகளை சாப்பிடுகின்றனர் என்ற புள்ளிவிபரம் வெளியாகியுள் ளது.

இது ஏதோ இந்திய கிராமங்கள் சுபிட்சம் பெற்று விளங்குகின்றன; கிராமமக்கள் அனை வரும் எவ்வித கவலையும் இன்றி வாழ்கின்றனர் அவர்கள் எல்லாம் பசிக்காக இன்றி ருசிக்காகவே பிஸ்கெட்டுகளை காலை உணவாக சாப்பிட்டு வருகின்றனர் என்பது போன்ற தோற்றம் உருவாக்கப்படுகிறது.

கிராமங்களின் உண்மையான நிலை என்ன?

அன்றாடம் வாழ்வாதாரங்களை தேடி நகரங்களை நோக்கி கிராம மக்கள் ஆயிரக் கணக்கில் சென்று கொண்டேயிருக்கின்றனர். கிராமத்தின் முக்கிய தொழிலாக விளங்கும் விவசாயத்தை நம்பியிருப்பவர்களும் மாற்றுத் தொழிலை தேடி வருகின்றனர். இந்நிலையில் விவசாயம் செய்தால் போட்ட முதலுக்கே மோசம் வந்துவிடுமோ என்ற அச்சம்தான் நிரந்தரமாக குடிகொண்டிருக்கிறது. அதன் விளைவாக நாளுக்கு நாள் பயிரிடும் பரப்பள வும் சுருங்கிக் கொண்டே வருகிறது. இதுதான் கிராமத்தின் இன்றைய நிலை. வயிறாரச் சாப்பிட வழியில்லாமல் இரண்டு ரூபாயில் கிடைக்கும் பிஸ்கெட்டை வாங்கி வயிற்றுப்பாட்டை தீர்க்க முயற்சிக்கின்றனர் என்பதுதானே உண்மை.

இது ஒருபுறம் என்றால், மறுபுறம் நடப்பது என்ன? காலம் காலமாக கிராமங்களில் காலை யில் உளுந்தங்களி, வெந்தயக்களி என ஊட்டச் சத்து மிகுந்த உணவுகளை தயாரித்து வயதான வர்கள் விற்று வந்தனர். அதனை ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் கொடுத்து வாங்கி சாப்பிட்டு வயல்வெளிக்கு செல்வது வழக்கம். இந்த வயதான பாட்டிகளின் தொழிலுக்கும் போட்டி யாக கார்ப்பரேட் நிறுவனங்கள் தற்போது களத் தில் குதித்துள்ளன. அப்படி பளபளப்பு பாலீத் தின் பைகளில் அடைத்துவிற்கும் அயிட்டங் களில் ஒன்றுதான் பிஸ்கட். பாலீத்தின் பாக் கெட்டுகளின் பளபளப்பு பாட்டிமார்களின் தொழிலை இருளாக்கி வருகிறது.

கார்ப்பரேட் நிறுவனங்களின் நுகர்பொருள் இந்திய கிராமங்களில் தற்போது ஆண்டுக்கு 40,500 கோடி ரூபாய்க்கு விற்பனையாகி வரு கிறது. இது 2025ம் ஆண்டு 4.50 லட்சம் கோடி ரூபாயை எட்டிவிடும் என்பது இவர்களின் கணக்கு. அதாவது இந்திய கிராமங்களின் ஒட்டுமொத்த சில்லரை வியாபாரத்தையும் அப் படியே கபளீகரம் செய்து விடலாம் என்பதுதான். இதற்கு வேண்டிய சகலவிதமான ஏற்பாடு களையும் மத்திய அரசு செய்து வருகிறது. அதன் ஒருபகுதிதான் சில்லரை வணிகத்தில் 51 விழுக்காடு அந்நிய நேரடி முதலீடுகளை இந் தியாவிற்குள் அனுமதிப்பது. ஏற்கெனவே இந்துஸ்தான் லீவர் போன்ற பன்னாட்டு நிறுவனங்களின் நுகர்வுப்பொருட்கள் இந்தியாவின் குக்கிராம பெட்டிக்கடைகளிலும் தாராளமாய்க் கிடைத்து வருகின்றன. இனி முழுக்க முழுக்க அதன் ஆக்கிரமிப்பே இருக்கும்

No comments: