Sunday, May 29, 2011

இந்திய பொருளாதார அடியாளின் உருப்படாத யோசனை!


கடந்த சில ஆண்டுகளாக அத்தியாவ சியப் பொருட்களின் விலை தொடர்ச்சி யாக உயர்வது வாடிக்கையான நிகழ்வாகி விட்டது. மத்தியில் ஆட்சிப் பொறுப்பிற்கு வந்த உடன் 100 நாட்களில் பணவீக்கத்தை கட்டுப்படுத்திவிடுவோம் என்று அறிக்கை வெளியிட்ட பிரதமர் மன்மோகன் சிங் சமீப காலங்களில் விலைவாசி உயர்வு குறித்து கருத்தே கூறாமல் தவிர்க்கிறார்.

மறு புறம் மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தொடர்ச்சியாக எகிறும் பெட்ரோல் விலை உயர்வுக்கும் மத்திய அரசு காரணம் இல்லை என்று புதிய விளக்கம் தந்து வருகிறார். வேளாண் மற்றும் நிதி அமைச்சக துறைகள் நாள்தோறும் உணவுப் பண வீக்கம் குறைந்து வருகிறது என்று புதிய புள்ளி விபரங்களை உற்பத்தி செய்து வரு கின்றன.

தற்போது பணவீக்கத்தை கட்டுப்படுத்த ஆலோசனை தந்துள்ள பிரதமரின் பொருளாதார ஆலோசகர் கவுசிக் பாசு, பணவீக்கத்தை கட்டுப்படுத்த சில்லரை வணிகத்தில் பன்னாட்டு தொழில் நிறு வனங்களை அனுமதிக்க வேண்டும் என்று தனது பங்கிற்கு கருத்து தெரிவித்துள்ளார்.

ஒரு புறம் விவசாயத்தில் ஈடுபடும் விவசாயக் குடும்பங்கள் தொடர் நஷ்டம் காரணமாக விவசாயத்தை விட்டே வெளியேறும் நிலை; மறுபுறம் பல லட்சம் விவசாயிகள் கடன் சுமை தாங்காமல் தற்கொலை செய்து கொள்ளும் நடைமுறைச் சூழலில் இந்தியா வின் மிக முக்கிய துறையாக அதிகளவு வேலை வாய்ப்புகளை குறைந்த முதலீட்டில் உருவாக்கும் சில்லரை வணிகம் விளங்கி வருகிறது. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த சில்லரை வணிகத்தில் வெளிநாட்டு முதலீடுகளை அனுமதிக்கி றோம் என்னும் மத்திய அரசின் தவறான கொள்கை முடிவுகள் பல கோடி இந்திய மக்களை இந்திய வணிகச் சந்தைகளில் இருந்து அப்புறப்படுத்த முயற்சிக்கும் மறை முக பொருளாதார நடவடிக்கையாகும். இவ்வாறு அனுமதிப்பதன் வாயிலாக சில்லரை சந்தைகளில் போட்டிகள் ஏற்படுத் தப்பட்டு பொருட்களின் விலை குறையும் என்ற நிலை காரணமாக இந்திய வணிகச் சந்தைகளில் பல பெரிய பன்னாட்டு பெரு முதலாளிகள், நிறுவனங்கள் தங்களின் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப பலத் தைக் கொண்டு பல லட்சம் ஏழை மற்றும் நடுத்தர வணிகர்களை அப்புறப்படுத்தி விட்டு, பின்னர் இந்தியச் சந்தையை பத்து முதல் பதினைந்து பன்னாட்டு நிறுவனங்கள் கைப்பற்றும் போது, குறுகிய காலத்தில் விலைவாசி உயரவே வழி செய்யும்.

இந்திய விவசாயிகள், நுகர்வோருக்கு இத னால் எந்த விதமான பொருளாதார நன் மைகளும் ஏற்படாது. மாறாக விலைவாசி உயர்வை மையமாகக் கொண்டு முதலாளித்துவ அமைப்புகள் தங்களின் வணிகத்தை விரிவாக்கம் செய்வது ஏழை மற்றும் நடுத்தர மக்களின் பொருளாதார நலன்களுக்கு எதிராகவே அமையும். விலைவாசி உயர்வை எந்த வகையிலும் கட்டுப்படுத்தாது என்பதே பொருளாதார உண்மை.


தி. ராஜ் பிரவீன்

Monday, May 23, 2011

ஐ.எம்.எப்.: கொள்லைக்கார கூட்டத்திற்கு தலைவர் யார்?


முதலாளித்துவ அமைப்பு முறையை மேலும் உறுதியாக கட்டுவதற்காக உருவாக்கப் பட்ட பன்னாட்டு நிதிநிறுவனம் (ஐஎம்எப்) யாரு டைய கட்டுப்பாட்டின் கீழ் இயங்க வேண்டும் என்பது குறித்து தற்போது உலக அளவில் பெரும் போட்டி நடந்து கொண்டிருக்கிறது.

ஐஎம்எப் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக இருந்த டொமினிக் ஸ்ட்ராஸ்-கான் என்பவர், நியூயார்க் நகரில் ஒரு ஹோட்டலில் தங்கி யிருந்தபோது 32 வயது பெண் ஊழியர் ஒரு வரை பாலியல் வன்முறைக்குள்ளாக்க முயற் சித்தது அம்பலமானதைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப் பட்டுள்ளார். இவர் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர். பிரான்சின் அடுத்த ஜனாதிபதி பதவிக்கு இவர் போட்டி யிடக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஸ்ட்ராஸ்-கான் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து பன்னாட்டு நிதிநிறுவனத்தின் தலை வர் பதவி காலியாகக் கிடக்கிறது. இந்த பதவிக்கு யார் வருவது என்பதே தற்போதைய போட்டி.

1944ம் ஆண்டு ஐஎம்எப் உருவாக்கப்பட் டது முதல் தற்போது வரை ஐரோப்பிய நாட் டைச் சேர்ந்த ஒருவர்தான் தலைவராக இருந்து வருகிறார். இதன் சகோதர நிறுவனமான உலக வங்கியை, அது துவங்கியது முதல் அமெரிக் காவைச் சேர்ந்த ஒருவரே தலைவராக இருந்து நிர்வகித்துவருகிறார். இந்த “பாரம்பரியத்தை” மாற்றக்கூடாது என்று ஐரோப்பிய பணக்கார நாடுகள் கூக்குரல் எழுப்பியுள்ளன. தங்களது நிதியமைச்சர் கிறிஸ்டின் லகார்டேயை ஐஎம்எப் தலைவராக்க வேண்டுமென பிரான்ஸ் கூறுகிறது. பிரான்சின் கருத்தை ஜெர்மனியின் அதிபர் ஏஞ்சலா மெர்க்கெல்லும் ஆதரித்துள்ளார்.

துணை இயக்குநராக ஏற்கெனவே அமெரிக் காவைச் சேர்ந்த ஜான் லிப்ஸ்கி பதவியில் உள் ளார். அவரை தற்காலிக இயக்குநராக்கி விட்டு, அமெரிக்க கருவூலத்துறை மூத்த அதிகாரி டேவிட் லிப்டனை ஐஎம்எப் துணை நிர்வாக இயக்குநராக்கிவிடலாம் என்று அமெரிக்கா கணக்குப் போடுகிறது.

நிர்வாக இயக்குநர், துணை நிர்வாக இயக்கு நர் என இரண்டு முக்கியப் பதவிகளையும் நாங் களே பகிர்ந்துகொள்கிறோம் என்று ஐரோப்பா வும் அமெரிக்காவும் கூறுகின்றன. அதற்கான தீவிர முயற்சிகளிலும் ஈடுபடுகின்றன.

ஆனால், உலகின் கீழ்த்திசையிலிருந்தும், தென்திசையிலிருந்தும் எதிர்ப்புக்குரல்கள் எழுந்துள்ளன. உலகப் பொருளாதாரத்தை தீர் மானிப்பதில் இனியும் அமெரிக்காவும் ஐரோப் பாவும் மட்டுமே முற்றிலும் கோலோச்சுகிற ஐஎம்எப்-க்கு இடமில்லை என்று குரல் எழுந் துள்ளது. சீனா, இந்தியா, பிரேசில், தென்னாப் பிரிக்கா ஆகிய வளர்முக நாடுகள், பன்னாட்டு நிதிநிறுவனத்தின் நிர்வாகக் கட்டமைப்பில் மிகப் பெரும் மாற்றங்களை இப்போதேனும் செய்தாக வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளன.

ஐஎம்எப் இயக்குநர் பதவி என்பது வெறும் பதவி அல்ல; இந்தப் பதவியைக் கைப்பற்ற ஐரோப்பாவும், அமெரிக்காவும் தீவிரமாக இருப்பதில் வெறும் “பாரம்பரிய” காரணங்கள் மட்டுமில்லை. மாறாக, மிகக் கடுமையான, ஆழ மான நெருக்கடிக்குள் சிக்கியுள்ள தங்களது பொருளாதாரத்தை மீட்க முன்னெப்போதையும் விட இன்னும் தீவிரமாக வளர்முக நாடுகளை ஒட்டச் சுரண்டுவதற்குரிய கொள்கைகளை வரையறுத்து, ஐஎம்எப் மூலமாகவும், உலக வங்கியின் மூலமாகவும் செயல்படுத்த வேண் டிய நிர்ப்பந்தத்தில் உள்ளன அமெரிக்க முத லாளித்துவமும், ஐரோப்பிய முதலாளித்துவ மும்!

2025ம் ஆண்டு வரை உலகப்பொருளாதார வளர்ச்சி நிலவரம் எப்படியிருக்கும் என்பது தொடர்பாக உலக வங்கி ஒரு அறிக்கை வெளி யிட்டுள்ளது. அதன்படி அடுத்த 15 ஆண்டு காலத்தில் உலகப் பொருளாதாரக் கட்டமைப்பில் மிகப்பெரும் மாற்றங்கள் ஏற்பட உள்ளன. குறிப்பாக, அமெரிக்காவை மையமாகக் கொண்ட உலகப்பொருளாதாரம், பன்முகத் தன்மை கொண்ட - பல துருவ பொருளாதார மாக வேகமாக மாறிவருகிறது. பொருளாதார வளர்ச்சி என்பதில் 2010ம் ஆண்டுவரை உலகம் எட்டிய வளர்ச்சி விகிதத்தைவிட, அடுத்த 15 ஆண்டுகளில் வளர்ச்சி விகிதம் கணிசமாகக் குறையும் அபாயம் இருக்கிறது. அத்தகைய சூழலில், 2011-2025 கால கட்டத்தில் வளர்ச்சி யடைந்த நாடுகளின் வளர்ச்சிவிகிதம் ஆண் டுக்கு 2.3 சதவீதம் மட்டுமே அதிகரிக்கும் ; ஆனால், வளர்முக நாடுகளின் வளர்ச்சி விகிதம் 4.7 சதவீதம் அளவிற்கு அதிகரிக்கும். இன்னும் குறிப்பாக, பிரேசில், சீனா, இந்தியா, இந்தோனே சியா, தென்கொரியா மற்றும் ரஷ்யா ஆகிய 6 நாடுகளின் வளர்ச்சி குறிப்பிடத்தக்க அளவிற்கு இருக்கும் என்றும், உலகின் மொத்த வளர்ச்சி யில் பாதி இந்த நாடுகளுடையதாக இருக்கும் என்றும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

இந்த பின்னணியில் உலகளாவிய பணக் கட்டமைப்பு முறையும் மாற்றத்திற்கு உள் ளாகும். உலக வர்த்தகத்தின் அடிப்படை அல காக இனியும் அமெரிக்க டாலர் மட்டுமே நீடிக்க முடியாது; யூரோ டாலரும், சீனாவின் யுவான் நாணயமும் முன்னுக்கு வந்துள்ளன.

எனவே, ஐஎம்எப் தலைமைப் பீடம் யாருக்கு என்பதில் போட்டி வலுத்துள்ளது. இது, இதுவரை நிகழ்ந்திராத வரலாறு.

Monday, May 9, 2011

உலகைப் புரட்டிய புத்தகங்கள்


ரூசோவின் சமுதாய ஒப்பந்தம்

பழமைக்கும் புதுமைக்கும் இடையிலான சமர்க்களமாக விளங்கிய பதினெட்டாம் நூற்றாண்டின் புதுமைப் படைப்பு இந்த புத்தகமாகும். 1776ல் நிகழ்ந்த அமெரிக்க புரட்சிக்கும், 1789ல் நிகழ்ந்த பிரெஞ்சு புரட்சிக்குமான விதையாக இந்த புத்தகம் விளங்கியதாக சரித்திர ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

சிக்மன் ப்ராய்டின் ‘கனவுகளின் விளக்கம்

மனித மனம் பற்றிய ஆழ்ந்த பல விஷயங்களை இந்த புத்தகம் ஆய்வு செய்கிறது. மனிதனின் நிறைவேறாத ஆசைகளின் பிரதிபலிப்பே கனவுகள். இது மனிதனை செயலுக்குத் தூண்டிவிடும் சக்தி கொண்டது, என இப்புத்தகம் கூறுகிறது.

சார்லஸ் டார்வினின் ‘உயிரினங்களின் தோற்றம்’

1859ல் இது வெளியிடப்பட்ட காலம் வரை உயிரினங்களின் தோற்றம் குறித்து மத கட்டுக்கதைகளே விதவிதமான விளக்கங்களைக் கூறிவந்தன. ஆனால் உயிரியல் மரபில் ஒரு புரட்சிகர சிந்தனை மாற்றத்திற்கே விதைபோட்டு, அதுவரையான உலக பார்வையினையே இந்நூல் மாற்றியமைத்துவிட்டது.

காரல்மார்க்ஸ் - பிரடெரிக் எங்கல்சின் உலக கம்யூனிஸ்ட் அறிக்கை

காரல்மார்க்ஸ், பிரடெரிக் எங்கல்ஸ் ஆகியோரின் கூட்டுப்படைப்பு உலக கம்யூனிஸ்ட் அறிக்கை ஆகும். ஒரு புதிய சோசலிஸ்ட் உலக கண்ணோட்டத்தை மனித குலத்திற்கு அளித்த இப்புத்தகம் நான்கு பகுதிகளைக் கொண்டதாகும்.

‘உலகத்தை மாற்று’ என மனித குலத்திற்கு அறைகூவல் விட்டபடியே வெளிவந்த இந்த புத்தகம் உண்மையில் கோடானு கோடி மக்களின் வாழ்வையே மாற்றியமைத்துக் காட்டியது.

காரல் மார்க்சின் ‘மூலதனம்’

மார்க்ஸ் 1844 முதல் 1883 வரை 40 ஆண்டுகளும் பிரடெரிக் எங்கல்ஸ் 11 ஆண்டுகளும் பாடுபட்டு உழைத்த உழைப்பின் விளைச்சல்தான் மூலதனம் புத்தகம் ஆகும். இதன் முதல் பாகம் 1867ல் மார்க்சாலும் இரண்டாம், மூன்றாம் பாகங்கள் மார்க்சின் மறைவுக்குப்பின்னர் முறையே 1885-1894 ஆண்டுகளில் பிரடெரிக் எங்கல்சாலும் வெளியிடப்பட்டன.

Sunday, May 1, 2011

எனக்கு வேண்டாம் அமெரிக்கக் குடியுரிமை!


கற்பனைக் கதாபாத்திரங்களில் உலக அளவில் பிரபலமானவற்றில் சூப்பர்மேனின் பாத்திரமும் ஒன்றாகும். விரைவில் வெளியாகும் புதிய சூப்பர்மேன் படக்கதைப் புத்தகத்தில், தான் அமெரிக்கக் குடியுரிமையை விட்டுவிடப் போவதாக சூப்பர்மேன் பேசும் வசனம் இடம் பெற்றிருக்கிறது.

900வது சூப்பர்மேன் படக்கதை புத்தகம் தற்போது வெளியாகிறது. இதில் அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையில் ராஜாங்க ரீதியிலான விஷயத்தில் சூப்பர்மேன் சிக்கிக்கொள்வது போன்ற காட்சி வருகிறது. அப்போது, உண்மை, நீதி ஆகியவை அமெரிக்காவின் பாதை என்பது காலங்கடந்த விஷயமாகிவிட்டது என்று சூப்பர் மேன் வசனம் பேசுகிறார்.

அமெரிக்க ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு ஆலோசகரிடம் சூப்பர்மேன் கூறுகிறார். நாளை நான் ஐக்கிய நாடுகள் சபையில் பேச நினைக்கிறேன். எனது அமெரிக்கக் குடியுரிமையை விட்டுவிடப் போவதாக தகவல் தெரிவிக்கப் போகிறேன். எனது நடவடிக்கைகள் அமெரிக்காவின் கொள்கைகளில் அடிப்படையில்.தான்எடுக்கப்படுகின்றன என்பது போன்ற தோற்றம்உருவாகி யுள்ளது உண்மை, நீதி மற்றும் அமெ ரிக்கப்பாதை... இவையெல்லாம் கடந் துபோய்விட்டன என்ற வசனம் அப்புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.

இதன் பின்னணி திரைப்படங்கள், படக்கதைகள் என்று அனைத்து படைப்புகளையுமே எதிரி நாடுகளுக்கு எதிராக உருவாக்கப்படுவதுதான் அமெரிக்காவின் வாடிக்கையான விஷயமாகும். சோவியத் யூனியனுக்கு எதிராக ஏராளமான திரைப்படங்கள் விஷம் கக்கியிருந்தன. கம்யூனிசத்திற்கு எதிரான கதைகள்ஆயிரக்கணக்கில்அமெரிக்க படைப்பாளர்களால் உருவாக் கப்பட்டன.

சூப்பர்மேன் போன்ற கதாபாத்திரங்களும் பெரும்பாலும் அப்படித்தான் உருவாக்கப்படுகின்றன. முதலாளித்துவ ஆதரவு, மக்கள் நல எதிர்ப்பு போன்றவை தடவப்பட்ட இனிப்புகளாகவே இக்கதைகள் சிறுவர்களுக்கு ஊட்டப்படுகின்றன. 1938 ஆம் ஆண்டு ஜெர்ரி ஸ்டீகல் மற்றும் ஜோ சுஷ்டர் ஆகிய இருவரும் சேர்ந்துதான் சூப்பர்மேன் என்கிற கற்பனைப் பாத்திரத்தை உருவாக்கினர். தற்போது வெளியாகும் படக்கதையில், ஈரானிலுள்ள அரசுக்கெதிராகப் போராடுபவர்களுக்கு ஆதரவாக சூப்பர்மேன் களமிறங்குவதாக எழுதப்பட்டுள்ளது. சூப்பர்மேனின் ரசிகர்கள் மத்தியில் இதற்கு எதிர்ப்பு கிளம்பியது. அமெரிக்க அரசின் கொள்கைகளையே சூப்பர்மேன் பிரதிபலிப்பது போன்று இருப்பதாக அவர்கள் குறை கூறினர்.

இதனால்தான் அமெரிக்கக்குடியுரிமையை விட்டுவிடப்போவதாக வசனம் சேர்க்கப்பட்டுள்ளது. குடியுரிமையை விடப்போகிறேன் என்கிற சூப்பர்மேனின் அதிரடி வசனம், அமெரிக்க அரசின் ஆதரவாளர்கள் மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்திவிட்டது.

இவ்வளவு காலம் அரசின் கொள்கைகளைப் பிரதிபலித்து வந்த சூப்பர்மேன் இப்படி வசனம் பேசுவதால், அமெரிக்கா அச்சமூட்டக்கூடிய சக்தியாகச் சித்தரிக்கப்பட்டுவிடும் என்று ஹாலிவுட்டைச் சேர்ந்தவரும், குடியரசுக்கட்சியைச் சேர்ந்தவருமான ஆஞ்சி மெயர் உள்ளிட்டோர் கூறியுள்ளனர்.

Tuesday, March 29, 2011

மக்களை ஏமாற்றுவதில் திமுக அரசு முதலிடம்


எதிர்பார்த்தது நடந்துவிட்டது. நடந்து முடிந்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் ஓய்வூதியத் திட்டத்தை தனியார்மயமாக்கிட வழிவகுக்கும் சட்டமுன்மொழிவினை ஆட்சியாளர்கள்; அறிமுகப்படுத்தியுள்ளனர். 2001ம் ஆண்டு வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு கொண்டுவந்த, ஓய்வூதியத்தை தனியார்மயமாக்கிட வழி வகுக்கும் மசோதா கடந்த 10 ஆண்டுகாலமாக நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியே யும் இடதுசாரிகள் நடத்திய போராட்டங்களின் காரணமாக கிடப்பில் போடப்பட்டது. ஆனால் இடதுசாரி கட்சிகளின் உறுப்பினர்களின் கடுமையான எதிர்ப்பையும் மீறி, பாஜகவின் ஆதரவுடன், காங்கிரஸ் இன்று மீண்டும் அந்த மசோதாவை அறிமுகப்படுத்தியுள்ளது.

2008-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நம் பிக்கை தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிப்பதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு லஞ்சம் கொடுத்த விவகாரத்தில் பிரதமர் மீது உரிமைமீறல் பிரச்சனையை நடப்புக் கூட்டத்தொடரில் கிளப்பிய பி.ஜே.பி., ஓய்வூதிய மசோதாவை காங்கிரஸ் கொண்டுவரும் போது அதை ஆதரித்தது என எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் பெருமையுடன் பீற்றிக்கொண்டுள்ளார்.

தொழிலாளர்களின், மத்திய-மாநில அரசு ஊழியர்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்துவரும் இடதுசாரிகளின் கரங் களை பலப்படுத்துவதே இன்றைய தேர்தல் கால உடனடி தேவையாக உள்ளது. ஓய்வூதி யத் திட்டம் தனியார்மயமாக்கலை எதிர்த்து வருவதுடன் இடதுசாரிகள் ஆளுகின்ற மேற்குவங்கம் கேரளம், திரிபுரா ஆகிய மாநிலங்களில் அதை அமல்படுத்த மறுத்துவருப வர்கள் இடதுசாரிகள். இன்று இந்திய நாட்டின் இறையாண்மைக்கு ஆபத்தை விளை விக்கும், ஊழலின் ஊற்றுக் கண்ணாக திகழும், காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டாளிகளை ஆட்சியிலிருந்து அகற்றுவதும், அவர்களை பலகீனப்படுத்துவதுமே இன்றைய அவசர அவசியத் தேவையாகும். இந்த அடிப்படையி லேயே இன்று தமிழகத்தில் இடதுசாரிகள் பங்கேற்றுள்ள அ.இ.அ.தி.மு.க அணி உருவாகியுள்ளது. இந்த அணியினை வெற்றிபெறச் செய்வதே இன்று நம்முன் உள்ள பணியாகும்.

திமுகஆட்சிக்கு வந்தபிறகு கொடுத்த வாக்குறுதியை காற்றில் பறக்கவிட்டது. காலிப் பணியிடங்களை நிரப்புவோம் என்று வாக்குறுதி கொடுத்தார்கள். இன்று தேர்தல் நடத்தும் துறையான வருவாய்த்துறையில் மட்டும் கடந்த 5 ஆண்டுகளில், காலி ஏற் பட்ட 4000 கிராம நிர்வாக அலுவலர் பணி யிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. இதே துறையில் 3000-க்கும் மேற்பட்ட உதவியா ளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. மக்கள் நலத் திட்டங்களை அமல்படுத்துகின்ற மற்றொரு துறையான ஊரக வளர்ச்சித்துறையில் 3000 உதவியாளர் பணியிடங்கள் காலியாக வுள்ளன. இது துணை முதல்வரின் பொறுப் பில் உள்ள துறை என்பது குறிப்பிடத்தக்கது. அரசுத்துறைகளில் கேந்திரமான, வருவாய்த் துறை, ஊரக வளர்ச்சித்துறையிலேயே இந்த நிலைமை என்றால், மற்ற துறைகளில் கேட்கவே வேண்டாம். வாய்கூசாமல் காலிப்பணியிடங்களை நிரப்பிவிட்டோம் என்று மக்களை ஏமாற்றி வருகின்றார்கள்.

வருவாய்த்துறையில் வட்டாட்சியருக்கும், ஊரகவளர்ச்சித்துறையில் வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கும் அவர்களின் பணியின் சிறப்புத் தன்மையை கருத்தில் கொண்டு, தனி ஊதியம் மாதம் ரூ.1000 வழங்கப்படும் என ஆணையிட்டவர்கள் ஒரே மாதத்தில் அதை இரத்து செய்து ஆணையிட்டுள்ளனர்.

“நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தொகுப்பூ திய முறையை ஒழிப்போம்” என்றார்கள். ஆனால் சிறப்பு காலமுறை ஊதியம் என்று இல்லாத ஒன்றை கண்டுபிடித்து, ஊழியர்களை ஏமாற்றினார்கள். ஊதியக்குழுவால் நிர்ணயிக்கப்பட்ட ஊதியம் கேட்டுப் போராடிய சத்துணவு ஊழியர் சங்கத் தலைவர்களை பணியிலிருந்து நீக்கினர்.

சாலைப் பணியாளர்களின் 41 மாத பணி நீக்கக் காலத்தை பணிக்காலமாக அறிவிப் போம் என்றவர்கள், அதை செய்திடக் கேட்ட சாலைப்பணியாளர்களை காவல் துறையின ரை வைத்து அடித்து காயப்படுத்தினர்.

ஆளும் கட்சியினரின் நிர்ப்பந்தத்திற்கு பணியாத அரசுஊழியர்களை அலுவலகத்திற்குள் புகுந்து தாக்கி காயப்படுத்தினர். மணல் கொள்ளையில் சமூகவிரோதிகளுடன் கை கோர்த்துக்கொண்டு அரசுஊழியர்களின் உயிருக்கு உலைவைத்தனர்.

கவுரவ விரிவுரையாளர்களை நிரந்தரப் படுத்துவோம் என கடந்த தேர்தல் அறிக் கையில் குறிப்பிட்டவர்கள், ஆட்சிக்கு வந்த வுடன் அவர்களை பணியிலிருந்து நீக்கினர். எதிர்த்து போராடியவர்கள் மீது காவல்துறை யின் மூலம் அடக்குமுறையை ஏவினர்.

அரசு ஊழியர் சங்கத்திற்கு அரசின் அங்கீகாரம் கொடுப்போம் என்று சொன்னவர்கள், அரசின் ஊழியர் விரோத நடவடிக்கைக ளுக்கு ஒத்திசைக்க அரசு ஊழியர் சங்கம் தயாராக இல்லை என்பதால் அங்கீகாரம் கொடுக்க மறுத்தனர் .

சங்கப் பிரதிநிதிகளுடன் பேசி பிரச்சனை களை தீர்ப்போம் என்று சொன்னவர்கள், பேச சென்றவர்களை காவல்துறையை வைத்து அடித்து உதைத்து அனுப்பினர். சொன்னதைச் செய்வோம் என்று சொன்னவர்கள், 6-வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளை மத்திய அரசு அறிவித்த தேதிக்கு மாறாக ஓராண்டு கழித்து அறிவித்தார்கள். மத்திய அரசு வழங்கிய வீட்டுவாடகைப்படியோ, போக்குவரத்துப்படியோ வழங்க மறுத்துவிட்டனர். மத்திய அரசு மகப்பேறு விடுப்பு 18 மாதங்கள் என்று வழங்கியுள்ள நிலையில் அதை தருவதற்கு தயாராக இல்லாதவர்கள், இன்றும் திமுக தேர்தல் அறிக்கையில் 4 மாதம் தருவோம் என்று அறிவி;த்துள்ளார்கள். ஊதியமாற்ற ஆணைகளில் குழப்பங்களை விளைவித்து ஊழியர்களிடையே பிளவு களை ஏற்படுத்த முயற்சித்தனர். முரண்பாடு களே இல்லை என்று ஏகடியம் செய்தவர்கள் இன்று தங்கள் தேர்தல் அறிக்கையில் மீண் டும் ஆட்சிக்கு வந்தால் முரண்பாடுகளை நீக்க மீண்டும் ஒரு குழுவினை அமைப்பதாக தெரிவித்துள்ளனர்! இனியும் இவர்களின் ஆசை வார்த்தையில் மயங்கிட அரசுஊழியர் கள், ஆசிரியர்கள் தயாராக இல்லை. சொல் வது ஒன்றும் செய்வது ஒன்றுமான இவர்க ளின் கபட நாடகத்தை புரிந்து கொண்டுவிட் டனர். ஆடு நனைகிறதே என்று கவலைப்பட்ட ஓநாய்களை அரசுஊழியர்கள் அடை யாளம் கண்டுகொண்டுவிட்டனர்.

க.ராஜ்குமார்
-கட்டுரையாளர், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் முன்னாள் மாநிலத் தலைவர்

Monday, March 14, 2011

1 2 3 செத்துபோக ரெடியா?: பேரழிவும், லாபமும்!


1979-ல் அமெரிக்கா வின் ‘த்ரிமைல் ஐலேண்ட்’ என்ற ‘மூன்று மைல் தீவில்’ அணு உலை வெடித்துச் சித றியது.

அதற்குப் பின்னர் 7 ஆண்டுகள் கழித்து 1986-ல் சோவியத் ஒன்றியத்தில் உக்ரைனின் செர்னோபில் எனும் இடத்தில் அணு உலை விபத்து ஏற்பட்டது. இந்த இரண்டும் ஏற்படுத்திய பாதிப்புகள், உலக நிகழ்வுகளின் வேகத்தில் மறக்கடிக் கப்பட்டிருந்த சூழலில் இவற்றை விட மிகக் கடுமையான பயங்கரத்தை ஜப்பான் எதிர்கொண்டுள்ளது.

இரண்டாம் உலகப்போரில் அமெ ரிக்கா வீசிய அணுகுண்டுகளால் மனித குலம் சந்தித்திராத பேரழிவை ஜப்பான் சந்தித்தது. ஹிரோஷிமாவும், நாகசாகியும் கண்ணிமைக்கும் நேரத்தில் அழிந்து போயின. அதற்குப் பிறகு இந்த உலகில் அணுசக்தியின் ஆபத்தை பற்றி மிக அதி கமாக பிரச்சாரம் செய்த நாடு ஒன்று இருக் கிறது என்றால் அது ஜப்பான்தான்.

இன்றைக்கு உலகின் வளர்ச்சியடைந்த நாடுகளில் ஜப்பானும் ஒன்று. ஜப்பானிய பெருமுதலாளிகளின் மூலதனம் மேலும் மேலும் லாபத்தை நோக்கிச் செல்லும் பய ணத்தில், அணுசக்தியால் தனது சொந்த மக்களுக்கு நேர்ந்த கதியை மறந்து, நாடு முழுவதும் மின்சார உற்பத்தியை மேம் படுத்துகிறோம் என்ற பெயரில், மேற்கத் திய பன்னாட்டு பெரும் நிறுவனங்க ளோடு கூட்டுச் சேர்ந்து கொண்டு எண் ணற்ற அணு உலைகளை நிறுவியது.

தீவு நாடான ஜப்பானின் கடலோரப் பகுதி முழுவதிலும் இன்றைக்கு 17 அணு மின் நிலையங்கள் இருக்கின்றன. மேலும் 13 அணுமின் நிலையங்களின் கட்டு மானப் பணி நடந்து கொண்டிருக்கிறது. இவற்றில் தற்போது இயங்கிக் கொண் டுள்ள அணுமின் நிலையங்களில் மொத் தம் 55 அணு உலைகள் செயல்படுகின்றன.

கடலோரப் பகுதி முழுவதிலும் அணு உலைகள் நிறைந்திருக்கும் இந்த நாட்டில், அணுசக்தி மூலம் தயாரிக்கப்படும் மின் சாரத்தின் மொத்த அளவு 20 சதவீதம் மட்டுமே.

ஜப்பான் கிழக்கு கடலோரப் பகுதிகள் அனைத்தையும் தாக்கி அழித்த ஆழிப் பேர லைகளிடம் அணு உலைகளும் சிக்கின.

தலைநகர் டோக்கியோவின் ஒட்டு மொத்த மின்சாரத் தேவையையும் பூர்த்தி செய்கிற புகுஷிமா அணுமின் நிலையங் கள், சுனாமிப் பேரலைகளால் தாக்கப் பட்டு, அதன் தொடர் விளைவாக புகு ஷிமா டெய்ச்சி அணுமின் நிலையத்தின் முதல் இரண்டு அணு உலைகள் வெடித் துள்ளன.

உண்மையில் அணு உலைகளுக்குள் என்ன நடந்தது. தற்போது என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை யாரும் அறியார். ஆனால், அணு உலைகள் வெடித்துச் சிதறிவிட்டன என்பது மட்டும் உண்மை.

வெடித்தது அணு உலை அல்ல; அதைச் சுற்றி கட்டப்பட்ட கான்கிரீட் கட் டிடம் மட்டுமே என்று ஜப்பான் அரசு அதி காரிகள், மழுப்பிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அணு கதிர்வீச்சு அபாயத்தை அவர்கள் மறுக்கவில்லை. வெடித்துச் சிதறிய அணு உலையிலிருந்து 20 கிலோ மீட் டர் சுற்றளவை தாண்டியிருக்கும் மக்கள், குழாயில் தண் ணீர் வந்தால் குடிக்கக் கூடாது; வீட்டை விட்டு வெளியே வரக் கூடாது; உடல் முழுவதையும் மூடிக் கொள்ள வேண் டும்; அந்தத் துணியை குளிர்வித்துக் கொண்டேயிருந் தால் நல்லது என்று அறிவுரை கூறியிருக்கிறார்கள்.

சுருக்கமாகச் சொன்னால், தப்பித்துக் கொள்ளுங்கள் அல்லது சாவை தழுவிக் கொள்ளுங்கள் என்று பொருள்.

இந்தப் பயங்கர பின்னணியில் ஒரு உண்மை அம் பலமாகிறது. அணு உலை வெடித்துச் சிதறியுள்ள புகு ஷிமா அணுமின் நிலையம் முற்றிலும் தனியாருக்கு சொந்தமானது. இந்த நிலையம் மட்டுமல்ல, ஜப்பானிலி ருக்கும் எந்த அணு உலையும் அரசுக்கு சொந்தமானது இல்லை. வெடித்துச் சிதறிக் கொண்டிருக்கும் புகுஷிமா டெய்ச்சி அணுமின் நிலையத்தில் 6 உலைகள் உள்ளன; அதற்கு அருகில் உள்ள புகுஷிமா டெய்னி அணுமின் நிலையத்தில் 4 உலைகள் உள்ளன. இவை இரண்டுமே டோக்கியோ எலெக்ட்ரிக் பவர் கம்பெனி (டெப்கோ)க்கு சொந்தமானவை. உலக அளவில் மிகப் பெரிய அணு மின் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்று டெப்கோ.

அணு உலைகளைக் கையாளுவதில், குறிப்பாக நில நடுக்கம், சுனாமி ஆபத்துகள் அதிகமாக உள்ள ஜப்பா னின் கிழக்கு கடலோரப் பகுதியில் இத்தகைய அணு உலை களை பராமரிப்பதில் உள்ள ஆபத்துகள் பற்றி டெப்கோ நிறுவனம் இதுவரையிலும் எந்த அக்கறையும் காட்ட வில்லை என்பது தெரியவந்துள்ளது. 2002ம் ஆண்டில், அணு உலைகளின் பாதுகாப்பு ஏற்பாடுகள் சரியில்லை என்பதை இந்த நிறுவனத்தின் தலைவராகச் செயல்பட் டவரே வெளி உலகிற்கு அம்பலப்படுத்தினார். இதன் காரணமாகவே இவரும், இதர நான்கு முக்கிய நிர்வாகி களும் ராஜினாமா செய்தார்கள். இதேபோன்ற சம்பவம் 2006லும், 2007லும் நடந்தது.

தற்போது உயிரைக் காத்துக் கொள்ள ஜப்பானியர்கள் ஓடிக் கொண்டிருக்கிறார்கள்.

ஜப்பானில் இருப்பதை போலவே இந்தியக் கடலோ ரம் முழுவதிலும் தனியார் பெரும் நிறுவனங்களின் அணு உலைகளை, மின் உற்பத்தி நிலையங்கள் என்ற பெயரில் உருவாக்கி லாபம் சம்பாதிப்பதற்கான அடிப்படை ஏற்பாடே இந்திய - அமெரிக்க அணுசக்தி உடன்பாடு.

பேரழிவை டி.வி.க்களில் பார்த்துக் கொண்டிருக்கும் இந்திய மக்கள் தீவிரமாக யோசிக்க வேண்டிய தருணம் இது

Saturday, March 5, 2011

அந்நிய நிதி மூலதனத்தை அரவணைத்திடும் பட்ஜெட்

மத்திய அரசின் பட்ஜெட்டில், விலை வாசி உயர்வு, ஊழல், கறுப்புப் பணம் போன்ற சாமானிய மக்களைப் பாதிக்கும் அடிப்படைப் பிரச்சனைகள் எதுகுறித்தும் எந்த நடவடிக் கையும் எடுக்கப்படவில்லை என்பது மட்டு மல்ல, அரசு தம்பட்டம் அடித்துக் கொள்வது மாதிரி ‘உள்ளார்ந்த வளர்ச்சி’க்கும் உதவக் கூடியதாக இல்லை. பொருள்களின் விநியோ கம் மற்றும் சந்தைப்படுத்தலில் உள்ள குறை பாடுகளே பணவீக்கத்திற்குக் காரணம் என்று நிதி அமைச்சர் கூறியிருக்கிறார். சென்ற பட்ஜெட்டில் பெட்ரோலியப் பொருட் களின் மீது விதிக்கப்பட்ட தீர்வைகளைத் திரும்பப் பெற எந்த முயற்சியும் மேற்கொள்ளப் படவில்லை.

அத்தியாவசியப் பொருள்கள் பரிவர்த்தனை மீது அதீதமான முறையில் நடைபெற்று வரும் ஊக வர்த்தகத்தைத் தடை செய்வது தொடர்பாகவும் எந்தக் குறிப் பும் பட்ஜெட்டில் காணப்படவில்லை. அதே போன்று, தேவைக்கும் மேல் இரண்டு பங்கு கொள்முதல் செய்து, கிடங்குகளில் சேகரித்து வைக்கப்பட்டுள்ள உணவு தானியங்களை தேவைப்படும் மக்களுக்கு விநியோகிப்பது தொடர்பாகவும் எதுவும் குறிப்பிடப்படவில் லை. இவ்வாறு விலைவாசியைக் குறைப் பதற்கான முயற்சி எதுவும் அரசுத்தரப்பில் மேற் கொள்ளப்பட வில்லை.

மாறாக, மக்களின் துன்பதுயரங்கள் மேலும் அதிகமாகக்கூடிய அளவிற்கே பட்ஜெட் அமைந்திருக்கிறது. எரிபொருள்கள், உரம் மற்றும் உணவுப் பொருள்களுக்கு அளித்து வந்த பெரிய அளவிலான மானியங் கள் 20 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் வெட்டப் பட்டிருக்கிறது.

மக்கள் மீதான சுமைகள் வேறொரு வகை யிலும் அதிகரிக்கப்பட்டிருக்கிறது. நேரடி வரிகளில் 11 ஆயிரத்து 500 கோடி ரூபாய் அளவிற்கு நிவாரணம் அளிக்கப்பட்டிருக்கும் அதே சமயத்தில், மறைமுக வரி மூலம் 11 ஆயிரத்து 300 கோடி ரூபாய் கூடுதலாக வரிகள் விதித்திட நடவடிக்கை எடுக்கப்பட் டிருக்கிறது. நேரடி வரிகளில் குறைப்பு என்பது உண்மையில் பணக்காரர்களுக்கு அளிக்கப்படும் மானியம் என்பதும், மறைமுக வரி விதிப்பு என்பது சாமானிய நுகர்வோர் மீது விதிக்கப்படும் சுமை என்பதும் பொருளாதாரம் அறிந்தவர்கள் அனைவருக்கும் நன்கு தெரி யும். சென்ற ஆண்டு பணக்காரர்களுக்கு அளிக்கப்பட்ட 5 லட்சத்து 11 ஆயிரத்து 300 கோடி ரூபாய் அளவிற்கான வரிச் சலுகை களுடன் இதுவும் சேர்ந்து கொள்கிறது.

கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும், பர்சனல் வருமானவரி செலுத்துவோருக்கும் சுமார் 1 லட்சத்து 38 ஆயிரத்து 921 கோடி ரூபாய்க்கு சலுகைகள் அளிக்கப்பட்டிருக்கின்றன. இது சென்ற ஆண்டு பணக்காரர்களுக்கு அளித்த தைவிடக் கூடுதலான மானியத் தொகை யாகும். இவ்வாறு, பணக்காரர்களுக்கு ‘ஊக்கு விப்பு’ என்ற பெயரில் மானியங்கள் அளிப்பது தொடர்கிறது.

ஊழல்களைச் சமாளிப்பதற்காக, அமைச் சர்கள் குழு ஒன்றை அமைக்க இருப்பதாக நிதி அமைச்சர் விநோதமான முறையில் அறிவித்திருக்கிறார். கறுப்புப் பணம் தொடர்பாக, ‘‘அரசாங்கம் ஐந்து முனையில் நடவடிக்கைகள் எடுக்க இருப்பதாகவும், இது உலக அளவில் கறுப்புப் பணத்திற்கு எதிரான நடவடிக்கைகளுடன் இணைந்தி ருக்கும்’’ என்றும் நமக்குத் தெரிவிக்கப்பட் டிருக்கிறது. ஆனால், மொரிசீயஸ் நாட்டுட னான இரட்டை வரிவிதிப்பு தவிர்ப்பு ஒப்பந் தம் (னுடிரடெந கூயஒயவiடிn ஹஎடினையnஉந ஹபசநநஅநவே (னுகூஹஹ) மறுபரிசீலனை செய்யப்படுவது தொடர்பாக உருப்படியான நடவடிக்கை எதுவும் இல்லை. இதன் மூலம் நம் நாட்டிற் குள் 42 விழுக்காடு அந்நிய மூலதனம் வந்து கொண்டிருக்கிறது என்பது எதார்த்த உண் மையாகும். இத்தகைய வழிமுறைகள்தான் வரி ஏய்ப்புக்கு உன்னதமான வாய்ப்புகளாகும்.

நிதித்துறை தாராளமய சீர்திருத்த நடவ டிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதற் காகத்தான் இவற்றின் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும் பன்னாட்டு நிதி மூலதனங்களை ஊக்கு விக்கும் வகையில் நிதித்துறையில் ஏழு சட் டங்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. இத் தகைய நடவடிக்கைகளை ஐ.மு.கூட் டணி-1 அரசாங்கம் எடுக்கமுடியாத வகையில் இடதுசாரிக் கட்சிகள் தடுத்து நிறுத்தி வைத்திருந்ததால்தான் உலகப் பொருளாதார மந்தத்தின் பாதிப்புகள் நம் நாட்டைச் சூறையாடாமல் நம் நாட்டைப் பாதுகாக்க முடிந்தது. இப்போது அரசு, அந்நிய நிதி மூல தனங்களின் ஆசைக்கு இணங்கக்கூடிய வகையில் நடவடிக்கைகள் எடுத்திருப்ப தானது, நாட்டை சர்வதேச ஊகச் சந்தையில் தள்ளிவிடும் அபாயத்திற்கு இட்டுச் சென்றுள் ளது. மேலும், தற்போதுள்ள பற்றாக்குறை நிலையில் நாட்டை ஊக நிதி பெரிய அளவில் சார்ந்திருக்கக்கூடிய வகையில் கொண்டு சென்றிருப்பது நல்ல அறிகுறியாகத் தெரிய வில்லை.

கடந்த மூன்றாண்டுகளில், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் பர்சனல் வருமானவரி செலுத்துவோருக்கும் அளிக்கப்பட்டுள்ள சலுகைகள் 3 லட்சத்து 61 ஆயிரத்து 414 கோடி ரூபாய்க்கும் அதிகமாகும். இத்தொகை வசூலிக்கப்பட்டு, பொது முதலீட்டில் ஈடு படுத்தப்பட்டிருந்தால், நம் நாட்டின் கட்டமைப்பு வசதிகளைக் கணிசமான அளவிற்கு மேம்படுத்தி இருக்க முடியும். வேலைவாய்ப்புக்களையும் குறிப்பிடத்தக்க அளவில் ஏற்படுத்தி இருக்க முடியும். அதன் விளைவாக மக்களின் வாழ்க்கைத்தரம் கணிசமான அளவிற்கு உயர்ந்திருக்கும். மாறாக ஆட்சியாளர்கள் நாட்டில் உள்ள ஏழை -பணக்காரர்களுக்கு இடையிலான இடை வெளியை மேலும் ஆழப்படுத்தி வருகிறார் கள். இதில் கொடுமை என்னவென்றால், சாமானிய மக்களுக்காகத்தான் இவற்றை எல்லாம் செய்கிறோம் என்று எவ்விதக் கூச்சநாச்சமுமின்றி சொல்லிக்கொண்டே இவற்றையெல்லாம் இவர்கள் செய்வதுதான்.

மொத்தத்தில், இந்த பட்ஜெட்டானது பொருளாதார அடிப்படைகளை மேலும் நலிவடையச்செய்யக்கூடிய அதே சமயத்தில், நாட்டில் பொருளாதார ஏற்றத்தாழ்வை மேலும் ஆழமானதாக்கிடும்.

நன்றி: எகனாமிக் டைம்ஸ்
சீத்தாராம் யெச்சூரி எம்.பி.,
தமிழில்: ச.வீரமணி