மத்திய அரசின் பட்ஜெட்டில், விலை வாசி உயர்வு, ஊழல், கறுப்புப் பணம் போன்ற சாமானிய மக்களைப் பாதிக்கும் அடிப்படைப் பிரச்சனைகள் எதுகுறித்தும் எந்த நடவடிக் கையும் எடுக்கப்படவில்லை என்பது மட்டு மல்ல, அரசு தம்பட்டம் அடித்துக் கொள்வது மாதிரி ‘உள்ளார்ந்த வளர்ச்சி’க்கும் உதவக் கூடியதாக இல்லை. பொருள்களின் விநியோ கம் மற்றும் சந்தைப்படுத்தலில் உள்ள குறை பாடுகளே பணவீக்கத்திற்குக் காரணம் என்று நிதி அமைச்சர் கூறியிருக்கிறார். சென்ற பட்ஜெட்டில் பெட்ரோலியப் பொருட் களின் மீது விதிக்கப்பட்ட தீர்வைகளைத் திரும்பப் பெற எந்த முயற்சியும் மேற்கொள்ளப் படவில்லை.
அத்தியாவசியப் பொருள்கள் பரிவர்த்தனை மீது அதீதமான முறையில் நடைபெற்று வரும் ஊக வர்த்தகத்தைத் தடை செய்வது தொடர்பாகவும் எந்தக் குறிப் பும் பட்ஜெட்டில் காணப்படவில்லை. அதே போன்று, தேவைக்கும் மேல் இரண்டு பங்கு கொள்முதல் செய்து, கிடங்குகளில் சேகரித்து வைக்கப்பட்டுள்ள உணவு தானியங்களை தேவைப்படும் மக்களுக்கு விநியோகிப்பது தொடர்பாகவும் எதுவும் குறிப்பிடப்படவில் லை. இவ்வாறு விலைவாசியைக் குறைப் பதற்கான முயற்சி எதுவும் அரசுத்தரப்பில் மேற் கொள்ளப்பட வில்லை.
மாறாக, மக்களின் துன்பதுயரங்கள் மேலும் அதிகமாகக்கூடிய அளவிற்கே பட்ஜெட் அமைந்திருக்கிறது. எரிபொருள்கள், உரம் மற்றும் உணவுப் பொருள்களுக்கு அளித்து வந்த பெரிய அளவிலான மானியங் கள் 20 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் வெட்டப் பட்டிருக்கிறது.
மக்கள் மீதான சுமைகள் வேறொரு வகை யிலும் அதிகரிக்கப்பட்டிருக்கிறது. நேரடி வரிகளில் 11 ஆயிரத்து 500 கோடி ரூபாய் அளவிற்கு நிவாரணம் அளிக்கப்பட்டிருக்கும் அதே சமயத்தில், மறைமுக வரி மூலம் 11 ஆயிரத்து 300 கோடி ரூபாய் கூடுதலாக வரிகள் விதித்திட நடவடிக்கை எடுக்கப்பட் டிருக்கிறது. நேரடி வரிகளில் குறைப்பு என்பது உண்மையில் பணக்காரர்களுக்கு அளிக்கப்படும் மானியம் என்பதும், மறைமுக வரி விதிப்பு என்பது சாமானிய நுகர்வோர் மீது விதிக்கப்படும் சுமை என்பதும் பொருளாதாரம் அறிந்தவர்கள் அனைவருக்கும் நன்கு தெரி யும். சென்ற ஆண்டு பணக்காரர்களுக்கு அளிக்கப்பட்ட 5 லட்சத்து 11 ஆயிரத்து 300 கோடி ரூபாய் அளவிற்கான வரிச் சலுகை களுடன் இதுவும் சேர்ந்து கொள்கிறது.
கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும், பர்சனல் வருமானவரி செலுத்துவோருக்கும் சுமார் 1 லட்சத்து 38 ஆயிரத்து 921 கோடி ரூபாய்க்கு சலுகைகள் அளிக்கப்பட்டிருக்கின்றன. இது சென்ற ஆண்டு பணக்காரர்களுக்கு அளித்த தைவிடக் கூடுதலான மானியத் தொகை யாகும். இவ்வாறு, பணக்காரர்களுக்கு ‘ஊக்கு விப்பு’ என்ற பெயரில் மானியங்கள் அளிப்பது தொடர்கிறது.
ஊழல்களைச் சமாளிப்பதற்காக, அமைச் சர்கள் குழு ஒன்றை அமைக்க இருப்பதாக நிதி அமைச்சர் விநோதமான முறையில் அறிவித்திருக்கிறார். கறுப்புப் பணம் தொடர்பாக, ‘‘அரசாங்கம் ஐந்து முனையில் நடவடிக்கைகள் எடுக்க இருப்பதாகவும், இது உலக அளவில் கறுப்புப் பணத்திற்கு எதிரான நடவடிக்கைகளுடன் இணைந்தி ருக்கும்’’ என்றும் நமக்குத் தெரிவிக்கப்பட் டிருக்கிறது. ஆனால், மொரிசீயஸ் நாட்டுட னான இரட்டை வரிவிதிப்பு தவிர்ப்பு ஒப்பந் தம் (னுடிரடெந கூயஒயவiடிn ஹஎடினையnஉந ஹபசநநஅநவே (னுகூஹஹ) மறுபரிசீலனை செய்யப்படுவது தொடர்பாக உருப்படியான நடவடிக்கை எதுவும் இல்லை. இதன் மூலம் நம் நாட்டிற் குள் 42 விழுக்காடு அந்நிய மூலதனம் வந்து கொண்டிருக்கிறது என்பது எதார்த்த உண் மையாகும். இத்தகைய வழிமுறைகள்தான் வரி ஏய்ப்புக்கு உன்னதமான வாய்ப்புகளாகும்.
நிதித்துறை தாராளமய சீர்திருத்த நடவ டிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதற் காகத்தான் இவற்றின் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும் பன்னாட்டு நிதி மூலதனங்களை ஊக்கு விக்கும் வகையில் நிதித்துறையில் ஏழு சட் டங்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. இத் தகைய நடவடிக்கைகளை ஐ.மு.கூட் டணி-1 அரசாங்கம் எடுக்கமுடியாத வகையில் இடதுசாரிக் கட்சிகள் தடுத்து நிறுத்தி வைத்திருந்ததால்தான் உலகப் பொருளாதார மந்தத்தின் பாதிப்புகள் நம் நாட்டைச் சூறையாடாமல் நம் நாட்டைப் பாதுகாக்க முடிந்தது. இப்போது அரசு, அந்நிய நிதி மூல தனங்களின் ஆசைக்கு இணங்கக்கூடிய வகையில் நடவடிக்கைகள் எடுத்திருப்ப தானது, நாட்டை சர்வதேச ஊகச் சந்தையில் தள்ளிவிடும் அபாயத்திற்கு இட்டுச் சென்றுள் ளது. மேலும், தற்போதுள்ள பற்றாக்குறை நிலையில் நாட்டை ஊக நிதி பெரிய அளவில் சார்ந்திருக்கக்கூடிய வகையில் கொண்டு சென்றிருப்பது நல்ல அறிகுறியாகத் தெரிய வில்லை.
கடந்த மூன்றாண்டுகளில், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் பர்சனல் வருமானவரி செலுத்துவோருக்கும் அளிக்கப்பட்டுள்ள சலுகைகள் 3 லட்சத்து 61 ஆயிரத்து 414 கோடி ரூபாய்க்கும் அதிகமாகும். இத்தொகை வசூலிக்கப்பட்டு, பொது முதலீட்டில் ஈடு படுத்தப்பட்டிருந்தால், நம் நாட்டின் கட்டமைப்பு வசதிகளைக் கணிசமான அளவிற்கு மேம்படுத்தி இருக்க முடியும். வேலைவாய்ப்புக்களையும் குறிப்பிடத்தக்க அளவில் ஏற்படுத்தி இருக்க முடியும். அதன் விளைவாக மக்களின் வாழ்க்கைத்தரம் கணிசமான அளவிற்கு உயர்ந்திருக்கும். மாறாக ஆட்சியாளர்கள் நாட்டில் உள்ள ஏழை -பணக்காரர்களுக்கு இடையிலான இடை வெளியை மேலும் ஆழப்படுத்தி வருகிறார் கள். இதில் கொடுமை என்னவென்றால், சாமானிய மக்களுக்காகத்தான் இவற்றை எல்லாம் செய்கிறோம் என்று எவ்விதக் கூச்சநாச்சமுமின்றி சொல்லிக்கொண்டே இவற்றையெல்லாம் இவர்கள் செய்வதுதான்.
மொத்தத்தில், இந்த பட்ஜெட்டானது பொருளாதார அடிப்படைகளை மேலும் நலிவடையச்செய்யக்கூடிய அதே சமயத்தில், நாட்டில் பொருளாதார ஏற்றத்தாழ்வை மேலும் ஆழமானதாக்கிடும்.
No comments:
Post a Comment