Wednesday, October 15, 2008

மனநோயாளிகளை உருவாக்கும் உலகமயமாக்கல்

அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள பொருளாதார சரிவால் அந்நாட்டில் உள்ளவர்களின் 80 சதவீதம் பேர் மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று செய்திகள் வெளிவருகின்றன. வருங்காலம் கேள்விக்குறியாகி விட்டதே என்ற கவலைதான் அவர்களை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் பல்வேறு காரணங்களால் இந்தியாவில் 30 லட்சம்பேர் மனநோயாளிகளாக மாறியுள்ளனர் என்ற அதிர்ச்சியான தகவலை தேசிய மனித உரிமை ஆணையம் வெளியிட்டுள்ளது.
2010 ஆம் ஆண்டில் இதுதான் இந்தியர்களைப் பெரிதும் பாதித்த நோயாக இருக்கும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த விஷயம் குறித்து தேசிய மனித உரிமை ஆணையம் மேற்கொண்ட ஆய்வில் மனநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் தெரிய வந்துள்ளது. மனநோய் பாதிப்பால் எந்த நேரமும் 30 முதல் 35 லட்சம் வரையிலான நோயாளிகள் மருத்துவமனையில் சேர்க்கப்படலாம். ஆனால் நாடு முழுவதும் இவர்களுக்காக 29 ஆயிரம் படுக்கைகள் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளன.இவ்வளவு பெரிய அளவிலான நோயாளிகள் சிகிச்சைக்கான வசதிகளைப் பெற முடியவில்லை என்பதே மனித உரிமைப் பிரச்சனைதான் என்று கூறும் மனித உரிமை ஆணையம், இத்தகைய உரிமையைப் பாதுகாக்கும் வகையில் தேவையான மருத்துவ, சுகாதாரக் கட்டமைப்பை உருவாக்க வேண்டிய அவசியம் உள்ளது என்று சுட்டிக் காட்டுகிறது.
நிம்ஹான்ஸ் என்று அழைக்கப்படும் மனநோய் மற்றும் நரம்பு சிகிச்சைக்கான தேசிய மையம் மேலும் அதிர்ச்சி தரும் தகவல்களைத் தருகிறது.பொதுவான மனரீதியான பிரச்சனைகளால் ஐந்து கோடிப் பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதே அந்தச்செய்தி. இவர்கள் நோயாளிகளாக மாறுவதைத் தடுக்க போதிய சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்று நிம்ஹான்ஸ் எச்சரிக்கிறது. இவ்வளவு பேருக்கு சிகிச்சை அளிக்க இயலாத நிலையில் இருப்பது மிகவும் கவலை அளிக்கக்கூடிய அம்சம் என்று தேசிய மனித உரிமை ஆணையம் கூறுகிறது. பிரச்சனைக்கான காரணத்தை ஆணையத்தின் தலைவர் நீதிபதி எஸ்.ராஜேந்திர பாபு போட்டு உடைக்கிறார். உலகமயமாக்கலின் தாக்கமே இதற்குக் காரணம் என்கிறார்.
உலகமயமாக்கலால் வேலைப் பாதுகாப்பு பறிபோனது. பணியிடங்களில் வேலை நேரம் நீண்டு கொண்டே போகிறது. குடும்ப உறவுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய பல்வேறு அம்சங்களைச் சுமந்து கொண்டு உலகமயமாக்கல் பேயாட்டம் ஆடிக் கொண்டிருக்கிறது. இத்தகைய நிலைமைகள்தான் மனரீதியான அழுத்தத்தை உருவாக்கி விடுகின்றன. “எப்போதும் இல்லாத அளவுக்கு பெரும்பாதிப்பை ஏற்படுத்தும் நிலை உருவாகி வருகிறது. இதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளில் தேசிய மனித உரிமை ஆணையம் இறங்கியுள்ளது” என்கிறார் நீதிபதி ராஜேந்திரபாபு.தேசிய மனித உரிமை ஆணைய உறுப்பினர்களும், அதன் பிரதிநிதிகளும் நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளைப் பார்வையிட்டுள்ளார்கள்.
சிகிச்சை குறித்து கடும் அதிருப்தியைத் தெரிவித்துள்ள அவர்கள், மன
ரீதியாகப் பாதிக்கப்படுபவர்களுக்கு போதிய பாதுகாப்பு அளிக்க ஆணையம் நடவடிக்கை எடுத்து வருகிறது. மனரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ளவர் களை தள்ளி வைக்கும் அணுகுமுறைதான் மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது என்கிறது தேசிய மனித உரிமை ஆணையம்.

2 comments:

சரவணகுமரன் said...

கவலையளிக்க கூடிய செய்தி :-((

முரளிகண்ணன் said...

கவலையளிக்க கூடிய செய்தி :-((