Monday, December 13, 2010

ஊழலும் உலகமயமும்


சர்வதேச நிதியத்தில் (ஐஎம் எப்) பொருளாதார வல்லுநராகப் பணியாற்றிய தேவ்கர் என்பவர் தலைமையிலான குழு ஒன்று, சர்வ தேச அளவில் நிகழும் நிதித்துறை முறைகேடுகளை ஆய்வு செய்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்த அறிக்கையின்படி விடு தலை பெற்ற இந்தியாவில் 1948 முதல் 2008 வரையிலான காலத் தில் 21300 கோடி டாலர் அளவுக்கு பணம் (ரூபாய் மதிப்பில் 958500 கோடி இந்தியாவிலிருந்து வரி செலுத்தப்படாமல் கடத்தப்பட்டு வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கப் பட்டுள்ளது. இத்தொகையில் 68 சதம், அதாவது சுமார் ரூ.6,20,000 கோடி, 1991ம் ஆண்டுக்குப்பின் வெளியேறியுள்ளது. அதாவது 1991ம் ஆண்டில் நரசிம்மராவ் அமைச்சர வையில் நிதி அமைச்சராக இருந்த மன்மோகன் சிங், உலகமயக்கொள் கைகளை அதிரடியாக இந்தியா வில் புகுத்திய பிறகே இது நிகழ்ந் துள்ளது. ஆக, 60 ஆண்டுகளில் கடத்தப்பட்ட பணத்தில் 3ல் 2பங்கு 20 ஆண்டுகளில் உலகமயக் கொள்கைகள் அமலாக்கப்பட்ட போது வெளியேற்றப்பட்டுள்ளது.

மற்றொரு புள்ளி விபரமும் அந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ளது. அதாவது 1991க்கு முன்பு வெளிநாடு களுக்குக் சராசரியாக கடத்தப்பட்ட பணம் சதவீத அடிப்படையில் 9.1 என்றால் உலகமயக் கொள்கைகள் அமல்படுத்தப்படத் தொடங்கிய பிறகு அது 16.4 சதவீதமாக அதி கரித்துள்ளது. 2002 முதல் 2006 வரையிலான நான்கு ஆண்டு களில் அதாவது பாஜக மற்றும் ஐக் கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி நடைபெற்ற காலத்தில் ஆண் டொன்றுக்கு சராசரியாக 72000 கோடி ரூபாய் வெளியேறியுள்ளது. ஸ்பெக்ட்ரம் ஊழலில் சுருட்டப் பட்ட பணம் 14 வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ளதாக அண்மை யில் வெளியாகியுள்ள செய்தியும் இதற்குப் பொருத்தமானதாக உள்ளது .

முன்னாள் திட்டக்குழு உறுப் பினரும் ஓய்வு பெற்ற அரசு அதி காரியுமான எஸ்.பி சுக்லா கூறு கிறார்- நான் நேரடியாக கண்ணுற்ற நிகழ்வுகளின் அடிப்படையில் பார்த்தால் இதில் வியப்படைய எது வுமில்லை .தாராளமயக்கொள்கை கள் அமல்படுத்துதல் துவங்கப் பட்ட பிறகு ஊழல், பாய்ச்சல் வேகத்தில் அதிகரித்ததற்குக் கார ணம் - சந்தையே அரசாங்கத்துக் குள் நுழைந்ததனால் தான். அர சாங்கக் கொள்கைகளையும் அரசு நிர்ணயிக்க வேண்டிய விலை களையும் தொழில் நிறுவனங்களே தீர்மானிக்கும் நிலைக்கு உயர்ந்து விட்டன. அதிகாரிகள் மற்றும் அர சியல்வாதிகளுடன் கலந்துரையாடு வது மற்றும் அரசு நடவடிக்கை களில் தொழில் நிறுவனங்கள் ஈடு படுகின்றன என்பது மட்டுமல்ல. அவை அரசியல் கட்சிகள் மற்றும் ஒட்டுமொத்த ஆட்சி அமைப்பு முறைக் குள்ளேயே நுழைந்துவிடுகின்றன.

அமைப்பு முறைக்குள்ளேயே அவை தலையிடுவதற்கு பாஜக ஆட்சிக்கால அனுபவம் ஒன்றை சுக்லா உதாரணமாகக் குறிப்பிட்டுள் ளார். பாஜக ஆட்சிக்காலத்தில் அலைபேசி சேவையை நடத்து வதற்கான அனுமதியை அளிப் பதற்கு ஏலமுறைதான் முதலில் பின்பற்றப்பட்டது. பல பெரும் தொழில் நிறுவனங்களும் ஏலத்தில் பங்கேற்று அனுமதியைப் பெற்றிருந் தன. ஆனால் அந்த ஏலத் தொகைக்கு லாபம் ஈட்ட முடியாது என்பதை அவை உணர்ந்த பிறகு மீண்டும் அரசாங்கத்துடன் பேசி லைசென்ஸ் முறைக்கு மாறுவதற்கு அரசாங்கத்தை அவை இணங்க வைத்து விட்டன.அதனால் ஏலத் தொகையை விட குறைந்த விலைக்கு அலைபேசி சேவையைத் தொடர அந்த நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. அரசாங்கம் என்ன செய்திருக்க வேண்டும் ? ஏலத் தொகையைக் கட்ட முடியாத நிறு வனங்களுக்கு அபராதம் விதித்து விட்டு அவைகளின் உரிமங்களை ரத்து செய்திருக்க வேண்டும். ஏலத்தில் பங்கேற்ற பிற திறமை யான நிறுவனங்களுக்கு அனுமதி அளித்திருக்கவேண்டும் அல்லது மறு ஏலம் நடத்தியிருக்க வேண் டும் . ஆனால் ஏலநிபந்தனைகளை நிறைவேற்றாத தொழில் நிறுவனங் களே குறைந்த கட்டணத்தில் அலை பேசிப்பணியை நடத்த அனுமதிக்கப்பட்டன. இந்த முறை கேடான முன்மாதிரியைத்தான் நானும் கடைப்பிடித்தேன். குற்றம் எதனையும் இழைக்கவில்லை என்ற பல்லவியை கீறல் விழுந்த ஒலி நாடாவைப்போல ஆ.ராசா மீண்டும் மீண்டும் பாடிவந்தார். கரு ணாநிதியும் அதையே வலியுறுத்தி வந்தார்.

பொருளாதார தாராளமய மாக்க லுக்கு ஆதரவாக லாவணிபாடிவந்த தொழில் நிறுவனங்கள் உலகமய தாராளமயக் கொள்கைகள் தான் லஞ்ச லாவண்ய லைசென்ஸ் பர்மிட் ஆட்சியிலிருந்து இந்தியா வை விடுத்து விட்டதாக வித்தாரம் பேசிவந்தன. ஆனால் கூர்ந்து கவ னித்தால் தாராளமய யுகத்தில் ஊழ லுக்கான பாதைகள்தான் மாறியுள் ளன என்றும் அதன் பிரம்மாண்டத் தையும் அது எட்டும் தொலைவை யும்தான் அதிகரித்துள்ளன என் கிறார் சுக்லா. ஸ்பெக்ட்ரம் ஊழலின் பிரம்மாண்டம் சுக்லாவின் கூற்றை மெய்ப்பிக்கிறது அல்லவா? பர்மிட் லைசென்ஸ் ஆட்சியின் போது லஞ்ச ஊழல்கள் திரை மறைவில் நடைபெற்றன. அவை வெளியில் தெரிந்தால் அவமானம் என்று அஞ்சப்பட்டது.ஆனால் இப்போது இதெல்லாம் சகஜமப்பா என்ற பார்வை அரசியல் வாதிகள் மற்றும் அதிகாரவர்க்கத்தின் மத்தியில் காணப்படுகிறது.அதனை சட்ட பூர்வமாக்குவதைத் தவிர மற்ற அனைத்தையும் அவர்கள் செய்து விட்டார்கள்.

இந்தியாவில் ஊழலை உச்ச மட்ட அளவுக்கு கொண்டு சென் றது உலகமய, தாராளமயக் கொள் கைகளே என்று குறிப்பிடும் முன் னாள் மத்திய கண்காணிப்பு ஆணையர் என் .விட்டல் பின்வரு மாறு கூறுகிறார்- தாராளமயக் கொள்கைகள் பிரம்மாண்டமான ஊழலுக்கு இட்டுச்சென்றுள்ளன. முந்தைய பர்மிட் -லைசென்ஸ் ஆட்சியமைப்பில் ஊழல் என்பது சில்லரை வணிகம் போல நடத்தப் பட்டது. ஏனெனில்அப்போது தனி நபர்கள் உரிமங்களை பெறும் முயற்சிகளில் ஈடுபட்டு வந்தனர். தாராளமயமாக்கல் கொள்கையின் அமலாக்கத்துக்குப்பிறகு பிரம் மாண்டமான ஊழல்கள் மூலம் தான் அரசியல்வாதிகளால் பணம் பண்ண முடிகிறது. அதற்கேற்ற வகையில் கொள்கைகளை வகுப் பதன் மூலமே அது சாத்தியமா யிற்று. தாராளமயமாக்கலுக்குப் பிறகு முதலாளித்துவ சந்தையே ஆதிக் கம் செலுத்தும் நிலை ஏற்பட்டது. எனவேதான் ஹர்ஷத் மேத்தா, கேதன் பரேக் போன்றவர்களின் ஊழலை நாடு எதிர்கொண்டது. நாடும் மக்களும் எதிர்கொண்டு வரும் பல்வேறு பிரச்சனைகளுக்குக் காரணமான உலகமயக் கொள்கை களையும் முதலாளித்துவ அரசியல் பொருளாதாரக் கொள்கைளையும் முறியடித்து மக்கள்நலன்களை உயர்த்திப்பிடிக்கும் கொள்கை களுக்காகப் போராடுவதே நம் முன் உள்ள ஒரேவழியாகும்.

-கி.இலக்குவன்

( ஆதாரம் : பிரன்ட்லைன் )

Monday, November 29, 2010

கிராமங்களை குறிவைக்கும் பன்னாட்டு நிறுவனங்கள்

உலகமயத்தின் மூலம் இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் ஊடுருவியுள்ள ஏகாதிபத்தியம் ஏற்கெனவே பல துறைகளில் தனியாட்சி நடத்தி வருகிறது. தற்போது இந்திய கிராமங்களில் தனது கழுகு கண் பார்வையை திருப்பியுள்ளது.

பன்னாட்டு நிறுவனங்களும், பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களும் தங்களின் உற்பத்திப் பொருட்களை நுகரும் சந்தையாக இந்திய கிராமங்களை தயார்ப்படுத்தும் வேலையை செய்து வந்தன. இதில் ஓரளவு வெற்றியும் பெற்றி ருக்கின்றன. அதன் எதிரொலிதான் தற்போது இந்திய கிராமங்களில் காலை உணவுக்கு பதிலாக 33 விழுக்காட்டினர் பிஸ்கெட்டுகளை சாப்பிடுகின்றனர் என்ற புள்ளிவிபரம் வெளியாகியுள் ளது.

இது ஏதோ இந்திய கிராமங்கள் சுபிட்சம் பெற்று விளங்குகின்றன; கிராமமக்கள் அனை வரும் எவ்வித கவலையும் இன்றி வாழ்கின்றனர் அவர்கள் எல்லாம் பசிக்காக இன்றி ருசிக்காகவே பிஸ்கெட்டுகளை காலை உணவாக சாப்பிட்டு வருகின்றனர் என்பது போன்ற தோற்றம் உருவாக்கப்படுகிறது.

கிராமங்களின் உண்மையான நிலை என்ன?

அன்றாடம் வாழ்வாதாரங்களை தேடி நகரங்களை நோக்கி கிராம மக்கள் ஆயிரக் கணக்கில் சென்று கொண்டேயிருக்கின்றனர். கிராமத்தின் முக்கிய தொழிலாக விளங்கும் விவசாயத்தை நம்பியிருப்பவர்களும் மாற்றுத் தொழிலை தேடி வருகின்றனர். இந்நிலையில் விவசாயம் செய்தால் போட்ட முதலுக்கே மோசம் வந்துவிடுமோ என்ற அச்சம்தான் நிரந்தரமாக குடிகொண்டிருக்கிறது. அதன் விளைவாக நாளுக்கு நாள் பயிரிடும் பரப்பள வும் சுருங்கிக் கொண்டே வருகிறது. இதுதான் கிராமத்தின் இன்றைய நிலை. வயிறாரச் சாப்பிட வழியில்லாமல் இரண்டு ரூபாயில் கிடைக்கும் பிஸ்கெட்டை வாங்கி வயிற்றுப்பாட்டை தீர்க்க முயற்சிக்கின்றனர் என்பதுதானே உண்மை.

இது ஒருபுறம் என்றால், மறுபுறம் நடப்பது என்ன? காலம் காலமாக கிராமங்களில் காலை யில் உளுந்தங்களி, வெந்தயக்களி என ஊட்டச் சத்து மிகுந்த உணவுகளை தயாரித்து வயதான வர்கள் விற்று வந்தனர். அதனை ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் கொடுத்து வாங்கி சாப்பிட்டு வயல்வெளிக்கு செல்வது வழக்கம். இந்த வயதான பாட்டிகளின் தொழிலுக்கும் போட்டி யாக கார்ப்பரேட் நிறுவனங்கள் தற்போது களத் தில் குதித்துள்ளன. அப்படி பளபளப்பு பாலீத் தின் பைகளில் அடைத்துவிற்கும் அயிட்டங் களில் ஒன்றுதான் பிஸ்கட். பாலீத்தின் பாக் கெட்டுகளின் பளபளப்பு பாட்டிமார்களின் தொழிலை இருளாக்கி வருகிறது.

கார்ப்பரேட் நிறுவனங்களின் நுகர்பொருள் இந்திய கிராமங்களில் தற்போது ஆண்டுக்கு 40,500 கோடி ரூபாய்க்கு விற்பனையாகி வரு கிறது. இது 2025ம் ஆண்டு 4.50 லட்சம் கோடி ரூபாயை எட்டிவிடும் என்பது இவர்களின் கணக்கு. அதாவது இந்திய கிராமங்களின் ஒட்டுமொத்த சில்லரை வியாபாரத்தையும் அப் படியே கபளீகரம் செய்து விடலாம் என்பதுதான். இதற்கு வேண்டிய சகலவிதமான ஏற்பாடு களையும் மத்திய அரசு செய்து வருகிறது. அதன் ஒருபகுதிதான் சில்லரை வணிகத்தில் 51 விழுக்காடு அந்நிய நேரடி முதலீடுகளை இந் தியாவிற்குள் அனுமதிப்பது. ஏற்கெனவே இந்துஸ்தான் லீவர் போன்ற பன்னாட்டு நிறுவனங்களின் நுகர்வுப்பொருட்கள் இந்தியாவின் குக்கிராம பெட்டிக்கடைகளிலும் தாராளமாய்க் கிடைத்து வருகின்றன. இனி முழுக்க முழுக்க அதன் ஆக்கிரமிப்பே இருக்கும்

Saturday, November 20, 2010

உலகமயத்தின் உப விளைவுகள்

அமெரிக்கா உள்ளிட்ட ஏகாதிபத்திய நாடுகளின் நலன்களுக்காகவே உலகமயக் கொள்கை திணிக்கப்படுகிறது என்பது தெளிவு. இந்தியாவைப் பொறுத்தவரை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு இந்தக் கொள்கைகளை செயல்படுத்துவதில் மும்முரமாக உள்ளது. அதனுடைய பாதகமான விளைவு அனைத்துத் துறைகளிலும் வெளிப்பட்டு வருகிறது.


முன்பேர வர்த்தகம் எனப்படும் மோசடி முறையால் அனைத்து அத்தியாவசியப் பொருட் களின் விலை கடுமையாக உயர்கிறது. இந்த முறையால் ஏழை-எளிய மக்களுக்கு எந்த லாபமும் இல்லை. இதனால் லாபம் பெறுவது முதலாளிகள் மட்டுமே. சிறுவர்த்தகர்களும், பொதுமக்களும் பாதிக்கப்படுகிறார்கள். ஆனால் இந்த முறையை முற்றாக தடைசெய்ய அரசு தயாராக இல்லை.

உலகமயத்தின் உப விளைவுகளில் ஒன்று ஊழல். உலகமயமும் ஊழலும் ஒட்டிப்பிறந்த இரட்டைக்குழந்தைகள். இந்தியாவில் பாஜக ஆட்சிக்காலத்தில் நடந்த பங்குச்சந்தை ஊழல் துவங்கி இன்றைக்கு நாறிக்கொண்டிருக்கும் 2-ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு, காமன்வெல்த் ஏற் பாடுகளில் நடந்த ஊழல், ஆதர்ஷ் அடுக்குமாடி குடியிருப்பு ஒதுக்கீட்டில் நடந்துள்ள ஊழல் போன்ற அனைத்துவிதமான ஊழல்களின் தாயாக உலகமய, தனியார்மய, தாராளமய கொள்கைகள் உள்ளன என்பதை மறுக்க முடியாது.

இந்த கொள்கைகளை பொறுத்தவரை பாஜக, காங்கிரஸ் மற்றும் இவற்றின் கூட்டாளிக்கட்சி கள் ஒரே மாதிரியான அணுகுமுறையையே பின்பற்றுகின்றன. ஊழல்கள் வெடித்துக் கிளம்பி வெளிவரும்போது, முதலாளித்துவக் கட்சிகள் ஒன்றையொன்று பரஸ்பரம் குற்றம்சாட்டிக் கொண்டு பிரச்சனையை திசைதிருப்ப முயல் கின்றன. ஊழல் மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்திய மக்களின் வாழ்க்கையையே பெரும் துயரத்தில் ஆழ்த்தவே இந்த நாசகர கொள்கைகள் வழிசெய்கின்றன.

இந்தியாவில் மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளிலும் உலகமயக்கொள்கை தன்னுடைய திருவிளையாடலை நடத்தி வருகிறது. கடுமை யான பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள அமெரிக்காவே இதற்கு முக்கியச் சான்றாகும். வேலையின்மை, வறுமை போன்ற பிரச்சனைகளின் வெம்மை தாங்காமல் இந்தியா உள்ளிட்ட நாடுகளைச் சுரண்டி தன்னுடைய நாட்டை காப்பாற்றும் முயற்சியில் அமெரிக்க அதிபர் ஒபாமா இறங்கியுள்ளார்.

பிரான்ஸ் நாட்டில் உலகமயக் கொள்கையால் பாதிக்கப்பட்டுள்ள தொழிலாளர்கள் தொடர்ந்து வீரஞ்செறிந்த போராட்டத்தை நடத்தி வருகின் றனர். கிரீஸ் உள்ளிட்ட நாடுகளிலும் போராட்டப் பேரலை வீசியடிக்கிறது. இந்த கொள்கைகளின் காரணமாக ஜப்பானில் சிறுவர்த்தகர்கள் தற் கொலை செய்துகொள்வதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின்றன. இங்கிலாந்தில் கல்விக்கட்டணம் கடுமையாக உயர்த்தப் பட்டுள்ளதை எதிர்த்து ஆசிரியர்களும், மாணவர் களும் இணைந்து போராடுகிறார்கள்.

முதலாளித்துவம் முன் நிறுத்தும் இந்த உலகமயக் கொள்கை, பிரச்சனைகளை தீவிரப்படுத்துமே தவிர மக்களுக்கு உதவாது. பீறிட்டு எழும் போராட்டங்கள் இதையே உணர்த்துகிறது.

Friday, October 29, 2010

வரியும் இலவசமும்


தனியார் நிறுவனங்களுக்கு மத்திய, மாநில அரசுகள் போட்டி போட்டுக் காண்டு அள்ளித்தரும் வரி மற்றும் இதர சலுகைகளை மறந்துவிட்டு, ஏழைகளுக்கான இலவச திட்டங் களால்தான் ஆபத்து என்று கூறுவது நியா யமற்றது என பொருளாதார நிபுணர் வெ.பா.ஆத்ரேயா கூறியுள்ளார்.

தமிழக அரசின் இலவசத் திட்டங்களும், உள், வெளிநாட்டு தனியார் நிறுவனங்களுக்கான சலுகைகளும் குறித்து பொருளாதார நிபுணர் ஆத்ரேயா கூறி யுள்ளதாவது:-

அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த அரசுகள் “இலவச” திட் டங்களை அறிவித்து, மாநில நிதி நிலைமையை ஆபத்துக்குள்ளாக்கி வருவதாகவும் மக்களை “சார்புத்தன்மை” பண் பாட்டுக்கு இட்டுச் செல்வதாகவும் பேசப்பட்டு வருகிறது. உண்மை என்ன? எது இலவசம்?

எது “இலவசம்” என்பதில் தெளிவு வேண்டும். நம் நாட் டில் செல்வந்தர்களுக்கும் பெரும் வணிக/தொழில் தனியார் நிறுவனங்களுக்கும் தொடர்ந்து அள்ளி வழங்கப்படும் வரிச்சலுகைகளை எல்லாம் பொருளாதார வளர்ச்சிக்கு அவ சியமான “ஊக்குவிப்பு” நடவடிக்கைகள் என்று வரவேற்ப தும், மிகுந்த வறுமையில் வாழும் மக்களுக்கு அளிக்கப்படும் குறைந்தபட்ச நலத்திட்டங்களை “இலவசங்கள்” என்று வர் ணிப்பதும் வாடிக்கையாக உள்ளது. இது முற்றிலும் தவறு என்று நான் கருதுகிறேன். துணிவாங்கும்போதும் தீப்பெட்டி வாங்கும் போதும் சமையலுக்கு எரிபொருள் வாங்கும் போதும் அரசுக்கு வரி செலுத்தி வரும் சாமானிய மக்களுக்கு அரசு மருத்துவ அமைப்புகளில் கட்டணம் இன்றி அல்லது குறைந்தபட்ச கட்டணத்தில் சிகிச்சை அளிக்கப் படுவதை யோ, கல்விக்கட்டணக் குறைப்பையோ “இலவசம்” என்று ஏளனம் செய்வது ஏற்புடையதல்ல.


பொது விநியோக அமைப்பின் மூலமாக அரிசியும் வேறு சில இன்றியமையாத உணவுசார் பொருட்களும் குறைந்த விலையில் அளிக்கப்படுவது வரவேற்கத்தக்கது. அதே போல் குழந்தைகளுக்கும் கருவுற்ற பாலூட்டும் தாய்மார் களுக்கும் சத்துக்குறைந்த இளம் பெண்களுக்கும் சத்துணவு வழங்கப்

படுவதும் பள்ளிகளில் மதிய உணவு தரப்படுவதும் புத்தகங்கள், சீருடைகள், சைக்கிள்கள், போக்குவரத்திற்கு கட்டணக்குறைவு ஆகியவை மாணவ-மாணவியருக்கு வழங்கப்படுவதும் வரவேற்கத்தக்க மனித வள முதலீடுகள். ஆனால் மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று அரசு நினைத்தால் செல்வந்தர்கள் மீது கூடுதல் வரி சுமத்தி அதை ஏழைகளுக்கு செய்யலாம். இதன் மூலம் அரசுக்கு ஏற்படும் கடன் முழுமையும் தவிர்க்க முடியும்.

முதலாளிகளை ஆதரிக்கும் அரசாங்கத்தின் கொள்கை கள் மத்திய-மாநில நிதி உறவு ஏற்பாடுகளும் மாநில அரசு களுக்கு வரவு-செலவு நெருக்கடிகளை ஏற்படுத்து கின்றன. தனியார் மூலதனங்களை ஈர்க்க நிலவும் போட்டி யில் பல மாநில அரசுகள். தனியார் கம்பெனிகளுக்கு பல வரி மற்றும் இதர அரசின் நிதி நிலைமைக்கு சிக்கல்கள் ஏற்படும் என்ற உண்மையை மறைத்து, மறந்துவிட்டு, ஏழை மக்க ளுக்கு என்று அறிவிக்கப்படும் திட்டங்களால்தான் ஆபத்து என்று கூறுவது முற்றிலும் நியாயமற்றது.

பெரும்பகுதி செலவுப்பொறுப்புகள் மாநில அரசுகள் மீது இருக்கையில், நாட்டில் மத்திய அரசின் கைக்கு வரும் மொத்த வரிப்பணத்தில் ஏன் மூன்றில் ஒரு பங்குக்கும் குறைவான தொகை அனைத்து மாநிலங்களுக்கும் பகிர்ந்தளிக்கப்படுகிறது? ‘தன்னாட்சி’ பேசும், அதை வலுவாக விளம்பரம் செய்யும் தமிழக அரசு இதை ஏன் தட்டிக் கேட்கவில்லை?

வெங்கடேஷ் ஆத்ரேயா

Wednesday, October 20, 2010

பிரான்ஸ் போராட்டத் தீ பரவுகிறது ஓய்வூதியப் பறிப்புக்கு எதிராக மாணவர்கள் போர்க்கொடி


ஓய்வு வயது அதிகரிப்பு மற்றும் ஓய்வூதிய வெட்டு ஆகியவற்றிற்கு எதிராக பிரான்ஸ் தொழிலாளர்கள் நடத்தி வரும் தொடர் போராட்டங்களுக்கு ஆதர வாக நாடு முழுவதுமுள்ள மாணவர்கள் போராட்டக் களத்தில் குதித்துள்ளனர்.

ரயில்வே, பெட்ரோல் சுத்திகரிப்பு நிலையங்கள் ஆகியவற்றின் தொழிலா ளர்கள் மேற்கொண்ட வேலைநிறுத்தத்திற்கு ஆதர வாக தபால்துறை, விமா னப்போக்குவரத்து, வாகன ஓட்டுநர்கள் ஆகியோரும் வேலைநிறுத்தம் செய்தனர். கடந்த இரண்டு மாதங்களில் நான்காவது முறையாக பிரான்ஸ் தேசம் தழுவிய முழு வேலை நிறுத்தத்தைக் கண்டது.

தற்போது சர்கோசி தலைமையிலான அரசின் இந்த மக்கள் விரோத நட வடிக்கைகளைக் கண்டித்து மாணவர்களும் போர்க் கொடி உயர்த்தியுள்ளனர். நாடு முழுவதுமுள்ள 400க் கும் மேற்பட்ட பள்ளிகள் இயங்கவில்லை. இளைஞர் களும் ஓய்வூதியப் பறிப்புக்கு எதிராக முழக்கமிட்டவாறு பிரான்ஸ் நகர வீதிகளில் மாணவர்களோடு கை கோர்த்து வலம் வந்தனர்.

பெட்ரோலிய நிறுவ னங்களின் ஊழியர்கள் முழு வேலை நிறுத்தம் செய்து வருவதால் நாட்டிலுள்ள 12 ஆயிரத்து 500 பெட்ரோல் நிரப்பும் நிலையங்களில் 2 ஆயிரத்து 500 நிலையங்கள் பெட்ரோல் இல்லாமல் தவிக்கின்றன. மக்கள் மத்தி யில் அரசுக்கு எதிரான கருத்து நிலவுவதால் தங்கள் போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்தப்போவதாக தொழிற்சங்கங்கள் அறிவித் துள்ளன.

Thursday, October 14, 2010

நோபல் பரிசுக்கும் உண்டு அரசியல் உள்நோக்கங்கள்

நோபல் பரிசுகள் மீது உலகம் முழுவதும் உள்ள பொதுவான மரியாதைக்குக் காரணம் பரிசுக்கான தொகை மட்டுமல்ல, நோபல் பரிசுத் திட்டம் எதற்காக உருவாக்கப்பட்டது என்ற நோக்கமும்தான். டைனமைட் வெடிகுண்டு உள்ளிட்ட நூற்றுக்கணக்கான பொருள்களைக் கண்டுபிடித்து கோடிகோடியாய்ப் பொருளீட்டிய வரான ஸ்வீடன் நாட்டு வேதியியல் வல்லுநர் ஆல்பிரட் நோபல், அழிவுக்குப் பயன் படும் தம் கண்டுபிடிப்புகளால் மன உளைச்சலுக்கு உள்ளானவராக, தமது மரணத்திற்குப்பின் நோபல் பரிசு அறக்கட்டளை அமைக்கப்படவும், தங்களது கண்டுபிடிப்புகளால் உலகளாவிய மனித சமுதாய மேம்பாட்டுக்குப் பங்களிக்கிற அறிவியலாளர்களுக்கு ஆண்டுதோறும் பரிசு வழங்கப்படவும் விருப்பம் தெரிவித்து உயில் எழுதி வைத்திருந்தார்.

1901 முதல் அறிவியல் துறையில் பங்களித்த வர்களுக்கு நோபல் பரிசுகள் வழங்கப்பட்டு வரு கின்றன. ஆனால், நோபல் பரிசு தேர்வுக் குழுவினர் உலக அமைதிக்காக என நோபல் பரிசுக்கு உரி யவர்களைத் தேர்வு செய்வதில்தான் அடிக்கடி பெரும் சர்ச்சையும், கடும் எதிர்ப்பும் எழுகின்றன.

இந்த ஆண்டுக்கான அமைதி விருதுக்கு சீனாவைச் சேர்ந்த லியூ ஜியாபோ தேர்வு செய்யப்பட்டிருப்பதாக நோபல் பரிசுக்குழு அறி வித்திருப்பது பலருக்கு வியப்பை ஏற்படுத்தி யிருக்கிறது. சீனாவில் பொது அமைதியை சீர் குலைக்க முயன்றதற்காகச் சிறையில் அடைக் கப்பட்டிருக்கிற ஒருவர் எப்படி இந்த விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டார் என்பதே அந்த வியப்புக் குக் காரணம். ஆனால், கடந்த காலங்களிலும் சீன அரசுக்கு எதிராக நோபல் குழு இவ்வாறு செயல்பட்டிருக்கிறது. 1989ல், திபெத்திய மதகுரு வும், சோசலிச சமுதாயத்தை நோக்கிச் செல் வதை ஏற்காமல் திபெத் மக்களை பிற்போக்கு மதவாதத்தின் பிடியிலேயே வைத் திருக்க முயல்கிறவருமான தலாய் லாமாவுக்கு இந்த விருது வழங்கப்பட்டது.

மேற்கத்திய நாடுகளின் அரசியல் நோக்கங் களுக்கு சாதகமான முறையிலேயே அவ்வப் போது இந்தக் குறிப்பிட்ட பரிசுக்கு உரியவர்கள் தேர்வு செய்யப்பட்டு வந்திருக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு இதன் மூலம் உண்மையாகிறது. முன்பு சோசலிச சோவியத் யூனியன் சிதறுண்டு போகக் காரணமான கொள்கையின் பிரதிநிதி யான மிகயில் கோர்பச் சேவ் இப்பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். போலந்தில் சோசலிச அரசு வீழ்த்தப்பட்டதில் முன்னணியில் இருந்த தொழிற்சங்கத் தலைவர் வாலேசாவுக்கு நோபல் பரிசு அளிக்கப்பட்டது. இராக்கில் இருந்து அமெரிக்க ராணுவம் வெளியேறும் என்று அறிவித்தாலும் அங்கே பதட்டம் தணிய எந்த ஆக்கப்பூர்வமான நடவடிக்கையும் எடுக்காத, பாலஸ்தீனத்தில் இஸ்ரேலின் அத்துமீறல்களைத் தடுக்காத, ஆப்கானிஸ்தானில் தொடரும் அமெரிக்க ராணுவ அராஜகங்களை நிறுத்தாத பாரக் ஒபாமா வுக்கு இந்தப் பரிசு அளிக்கப்பட்டது.

சோவியத் போல சீனாவையும் சிதறடிக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே லியூ ஜியா போ தேர்வு செய்யப்பட்டிருக்கிறார் என்று சீன வெளியுறவுத் துறை அமைச்சகமும், சீன ஊட கங்களும் விமர்சித்திருப்பதில் எள்ளளவும் தவ றில்லை. உலகப் பொருளாதாரத்தில் சீனா தன் இடத்தை அசைக்க முடியாத அளவுக்கு நிலை நாட்டியுள்ளது. அதை அசைக்க வேண்டும் என்ற சந்தை சக்திகளின் நோக்கத்திற்கு சாதக மாகவும் இந்தத் தேர்வு நடந்திருக்கிறது என்றால் அதில் மிகையில்லை.

Thursday, October 7, 2010

ஊக பேர வர்த்தகத்தைத் தடை செய்க

நாடாளுமன்றத்தின் இரு அவை களிலும் ‘‘பணவீக்கத்தின் எதிர்மறை விளை வுகளிலிருந்து சாமானியர்களைக் காப்பாற்றிட அரசை வலியுறுத்தி அவைத் தலைவர்களே கொண்டு வந்த தீர்மானத்தின் மீது முன்னெப் போதும் இல்லாத அளவிற்கு இரு அவைகளி லும் விவாதங்கள் நடைபெற்ற போதிலும், அத்தியாவசியப் பொருள்களின் விலைகள் உயர்ந்து கொண்டிருப்பது தொடர்கிறது. சாமா னிய மக்களின் வாழ்க்கைத்தரம் மேலும் மேலும் கடுமையான முறையில் சீர்குலைந்து கொண்டிருக்கிறது.

அரசாங்கம், பணவீக்க அட்டவணைக் காக புதிதாக ஒரு தொகுப்பை 2004-05ஆம் ஆண்டை ‘அடிப்படை ஆண்டாகக்’ கொண்டு, வெளியிட்டிருக்கிறது. புள்ளிவிவரங்களில் அதிகமானவற்றை மறைக்கும் விதத்திலும், பொருளாதாரம் தொடர்பாக கவர்ச்சிகரமான சித்திரத்தை மக்களுக்கு வழங்குவதற்காகவும் அரசாங்கம் விலைவாசி அட்டவணை எண் களை அடிக்கடி மாற்றிக்கொண்டிருக்கிறது. ஆயினும், உணவுப் பணவீக்கம் 2010 செப்டம் பர் 4ந்தேதியுடன் முடிவடையும் வாரத்தில் 15.10 விழுக்காடு உயர்ந்திருக்கிறது, தொடர்ந்து மூன்று வாரங்களாக உணவுப் பணவீக்கத்தின் விகிதம் உயர்ந்து கொண்டிருக்கிறது. தானியங் களின் விலைகள் 7.16 விழுக்காடும், பருப்பு வகைகளின் விலை 6.10 விழுக்காடும் உயர்ந் திருக்கிறது. கோதுமை விலை 10.16 விழுக் காடும், அரிசி 5.74 விழுக்காடும் உயர்ந்திருக்கிறது. பால் 23.41 விழுக்காடும், காய்கறிகள் மற் றும் பழங்களின் விலைகளும் உயர்ந்திருக்கின்றன.

விலைவாசியைக் கட்டுப்படுத்திடக் கோரி நடைபெற்ற பல்வேறு எதிர்ப்பு நடவடிக் கைகளின் போதும், நாடாளுமன்றத்தில் நடை பெற்ற விவாதங்களின்போதும், நாம் முன் வைத்த பல்வேறு கோரிக்கைகளில், ஊக வணிகத்தின் மூலம் ஏற்படும் உணவுப் பண வீக்கத்தைத் தடுத்திட அத்தியாவசியப் பொருட்களின் மீதான முன்பேர/ஊக வர்த் தகத்தைத் தடை செய்ய வேண்டும் என்பதும் ஒன்றாகும். மத்திய நிதி அமைச்சர், பதில் அளிக்கையில், இப்பிரச்சனை ஆராயப்பட்டு, தேவைப்பட்டால், குறைந்தபட்சம் தற்காலிக மாகவாவது இத்தகைய நடவடிக்கை எடுக் கப்படும் என்று உறுதி அளித்தார். ஆயினும், இது தொடர்பாக இதுவரை உருப்படியான நடவடிக்கை ஒன்றும் எடுக்கப்படவில்லை.

இதில் ஒன்றும் ஆச்சரியப்படுவதற்கில் லை. ஏனெனில் இத்தகைய நடவடிக்கை யானது ஊக வர்த்தகத்தில் ஈடுபட்டு கொள்ளை லாபம் ஈட்டிக் கொண்டிருக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களை நேரடியாகப் பாதிக்கும். இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி நாடாளுமன்றத்தில் முன் வைத்த வாதங்களையெல்லாம் அரசு கடந்த காலங்களில் எப்போதும் கண்டுகொள்ளவே இல்லை. ‘‘பணவீக்கத்திற்கு இவை காரணம் அல்ல’’ என்று கூறி நடவடிக்கை எதுவும் எடுக்காமல் மழுப்பிவிட்டது. ஆனால் நாம் முன்வைத்த வாதங்கள் மிகவும் சரி என்பதை ஐக்கியநாடுகள் ஸ்தாபனத்தின் சார்பில் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை உறுதிப்படுத்தி இருக்கிறது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கவுன்சில் இது தொடர்பாக அறிக்கை அளிக்குமாறு ஒரு குழுவை நிய மித்தது. அக்குழுவானது, ஐ.நா. சபைக்கு ஓர் அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. அக்குழு 2007 மற்றும் 2008ஆம் ஆண்டுகளில் உலகம் முழுவதும் பல நாடுகளில் ஏற்பட்ட உணவு நெருக்கடியையும் அடிப்படை உணவுப் பொருள்களின் விலைகளில் ஊகவர்த்தகம் ஏற்படுத்திடும் தாக்கத்தையும் ஆய்வு செய்தது. பின்னர் அக்குழுவின் தலைவர், ‘‘விலைவாசி உயர்வுக்கும், அத்தியாவசிய உணவுப் பொருள்களின் கடும் விலை உயர் வுக்கும் ஊக வர்த்தகமே முக்கிய காரணி யாகும்’’ என்று கூறி இருக்கிறார்.

‘‘குறிப்பாக, உணவுப் பொருட்கள் மீதான சந்தைகளில், ‘விவசாய சந்தை அடிப்படை’ களில் சம்பந்தமே இல்லாத ஹெட்ஜ் நிதியங்கள் (ாநனபந கரனேள), பென்ஷன் நிதியங்கள் (யீநளேiடிn கரனேள), முதலீட்டு வங்கிகள் (inஎநளவஅநவே யெமேள) போன்ற பகாசுரக் கம்பெனிகள் பல புகுந் திருப்பது விலைகளைக் கடுமையாக உயர்த்தி யிருப்பதில் குறிப்பிடத்தக்க பங்கினைச் செய்திருப்பதாக நம்புவதற்குக் காரணமிருக் கிறது. பொருள்களின் விநியோகம் மற்றும் தேவை ஆகியவற்றின் அடிப்படையில் நிர்ண யம் செய்யப்பட்டுவந்த விலைவாசி முறையை இது மாற்றி அமைத்துவிட்டது. எனவே, மற் றொரு முறை, உணவுப்பொருள்களின் விலை களில் நெருக்கடி ஏற்படுவதற்கு முன் உலக நிதித்துறையில் அடிப்படை சீர்திருத்தம் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும்.’’

இதுதான் இந்தியாவிலும் நடந்திருக்கிறது. விலைகள் முன்னெப்போதும் இல்லாத அள விற்கு உயர்ந்திருப்பதற்கு இவைதான் காரணங்களாகும். விவசாயப் பொருட்களின் மீது ஊக வணிகத்தின் அடிப்படையில் நடை பெற்றுள்ள வர்த்தகத்தின் மொத்த மதிப்பு ஒவ் வோராண்டும் உயர்ந்துகொண்டே வந்திருக் கிறது. 2009 ஏப்ரல் 1ல் இருந்ததைவிட 2010 ஜனவரி 31ல் இது 102.59 விழுக்காடு அதி கரித்திருக்கிறது. சரியாக ரூபாய் மதிப்பீட்டில் சொல்வதென்றால், 10,13,379.97 கோடி ரூபாய்க்கு இது நடைபெற்றிருக்கிறது. இப்போது பொருட் கள் சந்தைக்கு வரும்போது இருக்கும் விலை யை விட விற்கும்போது அதிகமாக இருந்தால் தான் லாபம் ஈட்ட முடியும். விலைகள் தொடர்ந்து உயர்ந்துகொண்டே இருந்தால்தான் கொள்ளை லாபம் ஈட்டமுடியும். எனவேதான் முன்பேர வர்த்தகத்தில் ஈடுபட்டிருக்கும் வர்த்தக சூதாடிகள் விலைகளை உயர்த்திக் கொண்டே இருக்கிறார்கள். அதன் காரணமாக மக்கள் அதிக விலைகொடுத்து பொருட்களை வாங்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.

இதேபோன்று உலக அளவில் 2007-08ஆம் ஆண்டில் விலைகள் உயர்ந்ததை ஐ.நா. அறிக்கை விவரிக்கிறது. ‘‘ஊக வர்த்த கம் உணவுப் பொருட்களின் சந்தைகளில் அனுமதிக்கப்பட்ட போதுதான் முதலாவதாக கடுமையான விலைவாசி நெருக்கடி ஏற்பட் டது’’ என்று அறிக்கை தெரிவிக்கிறது. 1998 இல் 440 பில்லியன் டாலர்களாக இருந்த அதன் மதிப்பு, 2002இல் 770 பில்லியன் டாலர்களாக அதிகரித்தது, பின்னர் அது 2007 ஜூனில் 7500 பில்லியன் டாலர்களாக தாவிக் குதித்தது.

அமெரிக்காவில் செயல்பட்டுவந்த லேமன் சகோதரர்கள் நிறுவனம் திவாலாவதற்குச் சற்றுமுன் உணவுப் பொருட் களின் மீதான ஊக வர்த்தகம் குறித்து ஓர் ஆய்வை மேற்கொண்டது. 2003க்கும் 2008 மார்ச்சுக்கும் இடையே இது 1900 விழுக்காடு அதிகரித்திருப்பதை அது வெளிப்படுத்தியது. அமெரிக்க டாலர் மதிப்பில் இது 13 பில்லியன் டாலர்களிலிருந்து 317 பில்லியன் டாலர் களாகும். இந்தப் பின்னணியில்தான் வர்த்த கம் மற்றும் வளர்ச்சிக்கான ஐ.நா. மாநாடு தன் 2009ஆம் ஆண்டு அறிக் கையில், ‘‘இவ்வாறு பொருட்கள் வர்த்தகத் தில் மிகப் பெரிய அளவில் நிதிமூலதனம் செலுத்தப்பட்டிருப்பதானது, பொருள்களின் விலைகளை நிர்ணயிப்பதில் பெரும் பங்காற்றி யுள்ளன. இதற்குமுன் விலைவாசியை நிர்ண யிப்பதில் இருந்த சந்தை அடிப்படைகளை எல்லாம் சம்பந்தமற்றவைகளாக்கிவிட்டன,’’ என்று குறிப்பிட்டிருக்கிறது.

இவ்வாறு ஊக வணிகத்தை விவரிக்கும் அறிக்கை மேலும், ‘‘பொருளை வாங்குபவர், எதிர்காலத்தில் அதற்கு மேலும் அதிக விலை கொடுக்க விருப்பத்துடன் இருக்கிறார் என் பதன் பொருள், எதிர்காலத்தில் அதன் விலை மேலும் உயரும் என்பதேயாகும். எனவே, எதிர் காலத்தில் பொருளின் விலை உயரும் என்று சொல்வது, பங்குச் சந்தைகளில் பொருட் களை விற்பவர்களை, பொருள்களின் விலை களை உயர்த்திக்கொள்வதற்கு சமிக்ஞை காட்டுவது போலாகிறது.’’ என்று தெரிவிக் கிறது. உண்மையில், சிகாகோ மெர்கண்டைல் எக்ஸ்சேஞ்ச்-இல் நிர்ணயிக்கப்பட்ட தானி யங்களின் எதிர்கால விலைகள் உலகம் முழு வதும் நடந்து வந்த தானிய வர்த்தக ஒப்பந்தங் களை நேரடியாகப் பாதித்தது. மேலும், ஊக வர்த்தகத்தில் ஈடுபடும் ஒருவர், மற்ற முதலீட் டாளர்களைப்போல் புதிய மூலதனம் எதையும் உருவாக்கப் போவதில்லை. ஊகவர்த்தகர் திவாலாகப் போகிறார் என்றால், அவருக்குக் கடன் கொடுத்தவர்கள் எந்தத் தொகையையும் அவரிடமிருந்து மீண்டும் பெற முடியாது.

இவ்வாறு உணவுப்பொருள்களின் மீதான பணவீக்கத்திற்கும், சந்தை அடிப்படை களுக்கும் எவ்விதச் சம்பந்தமுமில்லை என்ப தால், ஐ.நா. ஸ்தாபனத்தின் இந்த அறிக்கை யானது, சர்வதேச நிதியத்தில் ஜார்ஜ் புஷ்சால் முன்வைக்கப்பட்ட ‘‘சீனாவிலும் இந்தியா விலும் உணவுதானிய நுகர்வு அதிகரித் திருப்பதுதான் உணவுப் பொருள்களின் விலை உயர்வுக்குக் காரணம்’’ என்ற கூற்றை யும் போலித்தனமான ஒன்று என்பதை உலகிற்கு வெளிப்படுத்திவிட்டது.

உண்மையான வர்த்தகர்களுக்கும் ஊக வர்த்தகர்களுக்கும் இடையே சட்டரீதியாக பாகுபாட்டை ஏற்படுத்திட வேண்டும் என்பது இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள பரிந் துரைகளில் முக்கியமான ஒன்றாகும். மக்க ளுக்கு உணவு உரிமையை அளிக்கக்கூடிய விதத்தில் ஐ.நா.வில் அங்கம் வகிக்கும் ஒவ் வொரு நாடும் தன்னுடைய சட்டரீதியான கட மைகளை நிறைவேற்றிட, இப்பரிந்துரைகளை நிறைவேற்ற முன்வர வேண்டும் என்று அறிக்கை கேட்டுக்கொண்டிருக்கிறது.

சாமானியர்களின் நலன்கள் பாதுகாக்கப் பட வேண்டும் என்றால், நாடாளுமன்றத் தின் ஒட்டுமொத்த உணர்வு மதிக்கப்பட வேண்டும் என்றால், ஐமுகூ-2 அரசாங்கமானது, உணவுப் பொருட்கள் பரிவர்த்தனைகளில் செயல் பட்டு வரும் அனைத்துவிதமான ஊக வர்த்தகங்களை யும் உடனடியாகத் தடை செய்ய வேண்டும்.

-பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்

தமிழில் : ச.வீரமணி