Friday, April 3, 2009

மண்மோகன்சிங் ஒப்புதல் வாக்குமூலம் உலகமயமாக்கல் ஏழைகளை கொல்லும்

'பொருளாதார நடவடிக்கைகள் முடங்கி ஏழை பணக்காரன் என்ற வித்தியாசம் இல்லாமல் அனைவருமே தவித்துக் கொண்டிருக்கும்போது உங்கள் நாட்டுப் பொருளாதாரங்களை மட்டும் காப்பாற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுத்து நிலைமையை மேலும் சிக்கலாக்காதீர்கள்'' என்று தொழில்வள நாடுகளின் தலைவர்களுக்கு பிரதமர் மன்மோகன் சிங் வேண்டுகோள் விடுத்தார்.

லண்டனில் புதன்கிழமை இரவு நடந்த ஜி20 அமைப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்ற கூட்டத்தில் பேசுகையில் இந்த வேண்டுகோளை அவர் விடுத்தார்.

''பொருளாதார நடவடிக்கைகள் சுருங்கியதாலும் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்துவிட்டதாலும் எல்லா நாடுகளுமே தங்களைப் பற்றி மட்டுமே கவலைப்படுவது புரிந்து கொள்ளத்தக்கதே. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இடைவிடாமல் பிரசாரம் செய்து வளரும் நாடுகளையும் சம்மதிக்கவைத்து உலகமயமாக்கல் தாராளமயமாக்கல் ஆகியவற்றைப் பிற நாடுகளிலும் புகுத்தியிருப்பதால் காப்பு நடவடிக்கைகளில் இறங்கினால் அது வளரும் நாடுகளை ஒதுக்கியது போலாகிவிடும்.


பயன் தராது உலகமே பொதுச் சந்தை என்ற சிந்தனையில் தாராளமயத்தை அறிமுகப்படுத்திவிட்டு பெரும்பாலான மக்களையும் உழைப்புக் காரணிகளையும் கொண்டுள்ள வளரும் நாடுகளைப் புறக்கணித்துவிட்டு மேற்கொள்ளப்படும் எந்தவித புத்துயிர் ஊட்டும் நடவடிக்கைகளும் பயன் தராது என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும்.

இந்தச் சிக்கலிலிருந்து மீள நீண்டகால திட்டங்களும் நடவடிக்கைகளும் அவசியம். அதில் எல்லோருக்கும் பங்கு இருக்க வேண்டும். எல்லா நாடுகளிலும் பொருளாதாரத்தை மீட்சி பெறச் செய்வதற்கு பன்னாட்டுச் செலாவணி நிதியம் போன்ற அமைப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

உள்நாட்டுப் பிரச்னை எவ்வளவு தீவிரமாக இருந்தாலும் பன்னாட்டுச் செலாவணி நிதியத்துக்கு அளிக்கும் சந்தாவைத் தொழில்வள நாடுகள் பல மடங்காக அதிகரிப்பதன் மூலம் வளரும் நாடுகளில் தொழில் வர்த்தக நடவடிக்கைகளை எளிதாக முடுக்கிவிடலாம். இதன் பலன் தொழில்வள நாடுகளுக்குத்தான் கிடைக்கும்.

வளரும் நாடுகள் தங்களுடைய தொழில் வர்த்தகத் துறைக்குத் தேவைப்படும் இயந்திர சாதனங்களையும் கச்சாப் பொருள்களையும் தொழில் நுட்பத்தையும் வளர்ந்த நாடுகளிலிருந்துதான் வாங்குகின்றன. எனவே தொழில்வள நாடுகளின் லட்சியம் எளிதில் நிறைவேறிவிடும்.

வளரும் நாடுகள் சுமை அல்ல: 60 ஆண்டுகளில் இருந்திராத வகையில் பொருளாதார நெருக்கடி தோன்றியிருக்கிறது. இதற்கு முன்னால் ஏற்பட்ட மிகப்பெரிய பொருளாதார வீழ்ச்சியிலிருந்து நாம் சில பாடங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும். அப்போதும் இதைப்போல தொழில்வள நாடுகள் தத்தமது நாடுகளின் பொருளாதார நடவடிக்கைகளை மட்டும் முடுக்கிவிட நடவடிக்கைகளை எடுத்தன. ஆயினும் அது முழு வேகம் பெறவில்லை. வளரும் நாடுகள் என்பவை உங்களுக்குச் சுமையாக அல்ல உதவிகரமாக இருப்பவை என்பதை இந்த முறையாவது அங்கீகரித்தாக வேண்டும்.

உலக அளவில் வங்கி நிதித்துறை நடவடிக்கைகளைச் சீர்படுத்தி தரப்படுத்த வேண்டும். இதை படிப்படியாகச் செய்ய வேண்டும். அதே சமயம் இதை ஒரு சில நாடுகளில் மட்டும் மேற்கொள்ளாமல் உலக அளவில் மேற்கொள்ள வேண்டும். இதனால் பிரச்னை தொடங்குவதற்கு முன்னாலேயே அதைத் தரமான கணக்கு தணிக்கை நடவடிக்கைகள் மூலம் அடையாளம் கண்டுவிட முடியும். வங்கிகளும் நிதி நிறுவனங்களும்தான் பொருளாதார மீட்சிக்கான கருவிகள். எனவே இந்தச் சிக்கலான நேரத்தில் சரியாக நிர்வகிக்காத அவற்றுக்கு ஏன் அரசு நிதி ஒதுக்கி விரயம் செய்யவேண்டும் என்று பொதுமக்கள் கேட்கக்கூடும். ஆனால் இப்படிச் செய்வதன்மூலம்தான் பொருளாதார மீட்சியை அடைய முடியும் என்பதை நாம்தான் பொறுமையாக விளக்கியாக வேண்டும்.

கட்டுப்பாடுகள் ஏன்? அரசு என்பது மேற்பார்வை பார்த்தால் மட்டும் போதாது பொருளாதார நடவடிக்கைகளில் அக்கறை செலுத்தி தலைமை தாங்கி முன்னாலிருந்து வழி நடத்த வேண்டும் என்பதை இந்தச் சிக்கல் உணர்த்தியிருக்கிறது. கட்டுப்பாடுகள் என்பது தொழில் நிறுவனங்களை முடக்குவதற்காக அல்ல அவற்றை நேரான பாதையில் திருப்பிவிடத்தான் என்பதை இப்போதைய உதாரணங்களிலிருந்து நாம்தான் விளக்க வேண்டும். ஏழை நாடுகளின் பசி பஞ்சம் பட்டினி என்பதைப் போக்கும் நடவடிக்கைகளில் தொய்வு கூடாது. அந்த நாடுகளையும் அரவணைத்துச் செல்லும் வழிகளைக் கையாண்டால்தான் தொழில்வள நாடுகளின் வளர்ச்சி வேகம் பெறும்.

வரி ஏய்ப்புக்கு இடம் தரக்கூடாது: முறையற்ற வகையில் சம்பாதித்த பெரும் பணத்தை வங்கிகளின் ரகசிய கணக்குகளில் போடும் வழக்கத்துக்கு கட்டுப்பாடு தேவை. இதனால் வளரும் நாடுகளின் செல்வம் சுரண்டப்படுகிறது. இது மனிதகுலத்துக்கே எதிரான துரோகம். சொல்லப்போனால் இதுதான் பல நாடுகளின் பொருளாதாரச் சீர்குலைவுக்கே காரணம். அதே போல வரிச் சலுகையை அளிப்பதற்கென்றே சில நாடுகளையும் பகுதிகளையும் அனுமதிப்பதும் முறையில்லை. இதற்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்' என்றார் மன்மோகன் சிங்.

1 comment:

Anonymous said...

தோழர் பதிவில் எழுத்துக்கள் சரியில்லை