Thursday, March 19, 2009

முதலாளித்துவம்-சோஷலிசம்-நெருக்கடி

-பிரபாத் பட்நாயக்

இன்றையதினம் உலகம் எதிர் கொண்டுவரும் முதலாளித்துவ நெருக்கடியைப் பற்றி முதலாளித்துவ அறிவு ஜீவிகள் பல்வேறு விளக்கங்களை அளித்துவருகின்றனர். இது ஒரு விதி விலக்கான நிகழ்வு என்ற கருத்து பொது வாக நிலவி வருகிறது.நிதித்துறை போது மான கண்காணிப்புக்கு உட்படுத்தப்படா ததே நெருக்கடிக்குக் காரணம் என்கிறார் இந்த ஆண்டு நோபல் பரிசு பெற்ற பால் குரூக் மன்.அமைப்புமுறை செயல்பாட் டில் ஏற்பட்ட தவறு என்றும் உரிய நட வடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தால் தவிர்த்திருக்க முடியும் என்கிறார் ஓரளவு முற்போக்கு சிந்தனையுள்ள பொருளாதார வல்லுநரான ஜோசப் ஸ்டிக்லிஸ். ஆனால் இந்த விளக்கங்கள் எவையுமே சரியானவை அல்ல. இது அமைப்பு முறையின் செயல்பாட்டில் ஏற்பட்ட ஒரு தோல்வி அல்ல. முதலாளித்துவ அமைப்பு முறைக்கே ஏற்பட்டுள்ள தோல்வியின் விளைவே இந்நெருக்கடி. நிகழ்கால முதலாளித்துவத்தின் செயல்பாட்டின் ஒரு பகுதியாகத்தான் இது நிகழ்ந்துள் ளதே அன்றி, அதற்குத்தொடர்பில்லா மலோ அதற்கு வெளியிலிருந்தோ இது நிகழவில்லை.

சொத்து விற்பனை நிகழும் ஒரு சுதந்திர சந்தையில் ஊக வணிகம் கொடிகட்டிப்பறக்கும். சொத்துக்களை விலைக்கு வாங்க வருபவர்கள் அதனைத் தொடர்ந்து கட்டி ஆளும் நோக்கத்துடன் வருவதில்லை. அவற்றின் விலைகள் ஏறும் என்று அனுமானிக்கிறார்கள். அவற்றை விற்றால் நல்ல லாபம் கிடைக்கும் என்ற நிலை ஏற்படும் போது அவற்றை விற்றுவிடுகிறார்கள். வீடு, நிலம் போன்ற சொத்துக்களை வாங்கி விற்கும்போது அதற்கு இடைப்பட்டகாலத்தில் அவற் றைப் பராமரிக்க வேண்டியிருக்கும். இதற்கு செலவு பிடிக்கும். ஆனால் இப்ப டிப்பட்ட பராமரிப்புச்செலவுகள் இல்லாத சொத்துக்களாக இருப்பவை பங்குச்சந் தைப்பங்குகள் போன்ற நிதிச்சொத்துக் கள்தான். இணையதளம் மற்றும் தகவல் தொழில் நுட்பம் வளர்ச்சி பெற்றுள்ள இக்காலத்தில் உலகத்தின் ஒரு மூலை யில் அமர்ந்திருந்து கணிப்பொறியின் எலிக்குஞ்சின் மூக்கை ஒரு முறை அழுத்துவதன்மூலம் கோடிக்கணக்கான டாலரை வரவு-செலவு செய்ய முடிகிறது. எனவே இத்துறையில் தான் ஊகவணி கர்களின் ஆதிக்கம் கோலோச்சி வருகிறது.

ஒரு சுதந்திர சந்தையில் ஊகவணி கம் பரபரப்பாக நிகழும் போது அது அதில் பங்கேற்கும் அனைவரையும் தொற்றிக் கொள்கிறது. சில சொத்துக்களின் விலை ஏதோ சில காரணங்களால் முதலில் ஏறுகிறது. அது மேலும் அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்படுகிறது. ஒரு நிறுவனத்தின் பங்கு இவ்வாறு ஏறுகிறது என்றால் ஏராளமானவர்கள் அந்த நிறுவனப்பங்குகளை வாங்க விரைகின் றனர். அதனால் அதன் விலை மேலும் மேலும் அதிகரிக்கிறது. இப்படிப்பட்ட செயற்கையான விலை வீக்கத்தை ‘நீர்க் குமிழி வளர்ச்சி’ என்று பொருளாதார வல்லுநர்கள் குறிப்பிடுவார்கள்.

இந்த வளர்ச்சியும் கூட தற்காலிக மாக உண்மைப் பொருளாதார வளர்ச் சிக்கு வித்திடும். குறைந்த விலைக்கு வாங்கி விலை கணிசமாக அதிகரித்த வுடன் அவற்றை விற்பனை செய்பவர்கள் கிடைக்கும் ஆதாயத்தைக் கொண்டு கார், பங்களா, ஆடை, அணிகலன்கள், மற் றும் வீட்டு உபயோகப்பொருட்களை வாங் குவதற்கு செலவிடுவார்கள். அப்பொருட் களுக்கான கிராக்கி அதிகரிக்கும் போது அவற்றை உற்பத்தி செய்யும் நிறுவனங் களின் உற்பத்தி அதிகரிக்கும். இந்த நிறு வனங்களின் வேலை வாய்ப்பும் அதி கரிக்கும். சுருக்கமாகச் சொன்னால் சொத்து விற்பனைத்துறையில் நடை பெறும் பரபரப்பான ஊகவணிகம் உண் மைப்பொருளாதாரத்தில் மேற்கண்ட வகையில் ஒரு எழுச்சியை ஏற்படுத்தும். சொத்துக்களின் ஆரம்ப விலையேற்றத் துக்குக் காரணம் எதுவாக இருந்த போதி லும் உண்மைப்பொருளாதாரத்தில் ஏற்ப டும் இந்த எழுச்சி குறிப்பிடத்தக்க அள விலும் நீண்டகாலத்துக்கும் நீடிக்கும். 

சொத்துக்களின் விலை ஏற்றம் ஏதோ சில காரணங்களால் ஓய்ந்து போகிறது அல்லது நின்று போகிறது என்றுவைத் துக்கொள்வோம். ஊகவணிகர்கள் பரபரப் பாக செயல்பட ஆரம்பிப்பர். சொத்துக் களைக் கிடைக்கும் விலைக்கு தள்ளிவிட ஆரம்பிப்பர். ஏராளமானவர்கள் ஒரேநேரத் தில் விற்க முன்வரும்போது சொத்துக் களின் விலைகள் மளமளவென சரியத் தொடங்கும். சொத்துக்களின் விலை களில் அதலபாதாள வீழ்ச்சி ஏற்படும் போது அதனால் இழப்புகளை சந்திப்பவர் கள் பொருட்களுக்காகவும் பணிகளுக் கும் செலவு செய்யும் தொகைகளைக் குறைக்கும் போது அது உண்மைப் பொரு ளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்து கிறது. சொத்துக்களின் ஊகவணிகத்துக் காக வகை தொகையின்றி கடன் வாங்கு பவர்களால் கடன்களைத் திரும்பச் செலுத்த முடியாத போது வங்கிகள் திவாலாகிவிடுகின்றன வங்கிகளில் முதலீடு செய்த பலரும் தங்கள் பணத்தை வங்கிகளிலிருந்து திரும்ப எடுத்து விடுகின்றனர். நம்பிக்கையின்மை எங் கும் கோலோச்சுகிறது. பொருளாதாரப் பெரு வீழ்ச்சிக்காலத்தில் இதுதான் நிகழ்ந்தது.

பொருளாதார எழுச்சிக்காலத்தை ஊகவணிகமானது குறிப்பிடத்தக்க அளவுக்கும் நீண்டகாலத்துக்கும் நீட்டிக் கச்செய்ய முடியும். அதே போல கடுமை யான நெருக்கடிகளையும் தோற்றுவிக்க முடியும். நவீன கால முதலாளித்துவத்தில் நிதிச்சந்தைகள் முக்கியமான பங்களிப் பைச் செய்கின்றன. ஊகவணிகம் ஒரு தொற்று வியாதியைப் போல பல்கிப் பெரு கும்போது தொடர்ச்சியான பெரிய எழுச்சி யையும் அதேபோன்ற பெரிய அளவிலான வீழ்ச்சியையும் ஏற்படுத்த முடியும். இவ் வாறு செயற்கையான முறையில் பொரு ளாதாரம் வீக்கமடைவதும் வெடித்துச் சிதறுவதும் முதலாளித்துவ அமைப்பின் இயங்குமுறையாக உள்ளது. எனவே பலூன்களைப்போல வீங்குவதும் நெருக் கடி ஏற்படுவதும் அமைப்புமுறை செயல் பாட்டில் ஏற்பட்ட தவறுகளால் அல்ல. ஏனென்றால் அதுதான் முதலாளித்துவம் இயங்கும் முறை.

1930களில் பொருளாதாரப் பெருவீழ்ச்சியை முதலாளித்துவ உலகம் எதிர் கொண்ட போது சோவியத் யூனியன் சிறி தளவும் பாதிக்கப்படவில்லை. சொல்லப் போனால் அக்காலத்தில்தான் முன்னெப் போதும் இல்லாத பொருளாதார முன்னேற்றத்தை சோவியத் யூனியன் பதிவு செய்தது. வேலையின்மை என்பது முற்றிலுமாக நீக்கப்பட்டது. சோவியத் யூனியனின் மகத்தான முன்னேற்றத்தால் ஏற்பட்ட தாக்கத்தால் இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்களின் ஒருதலைமுறையே கம்யூனிசத்துக்கு ஆதரவாகத் திரும்பியது. அப்படி கம்யூனிஸ்டாக மாறிய ஒருவர் தான் இ.எம்.எஸ் நம்பூதிரிபாட்.

சோஷலிச அமைப்பு இயங்கும் முறை யும் முதலாளித்துவ அமைப்பு இயங்கும் முறையும் அடிப்படையில் வேறுபட்ட வை. சோஷலிச சமூக அமைப்பில் ஊக வணிகத்தால் ஏற்படும் நெருக்கடிகள் என்பது அறவே கிடையாது. அதேபோல பொருட்களின் வேண்டல் குறைவதால் ஏற்படும் நெருக்கடிகள் என்பதும் கிடையாது.

ஒரு பொருளின் விலை மக்களால் வாங்க முடியாத அளவுக்கு அல்லது ஒட்டு மொத்த அளவில் போதுமான வேண்டலை ஏற்படுத்தாத அளவுக்குக் கூடுதலாக இருந்தால் ஒரு அரசாங்க உத்தரவின் மூலம் இப்பொருட்களின் விலையைக் குறைத்துவிடுமாறு அரசு உத்தரவிடமுடியும். இதனால் நிறுவனங்களுக்கு ஏற்படும் இழப்பை அரசே ஈடு செய்து விடும். இதனால் உற்பத்தியாகும் பொருட்களின் விற்பனை உறுதி செய்யப்படும். முதலாளித்துவ சமூக அமைப்பில் பொருட்கள் விற்பனையாகவில்லை என்றால் அவற்றின் உற்பத்தி குறைக்கப்படும். தொழிலாளர்களின் வேலை பறிபோகும். பொருளாதார வீழ்ச்சி அனைத்துத் துறை களுக்கும் விரிவடையும்போது பெரிய பொருளாதார நெருக்கடி என்ற வடிவத்தை எடுக்கும் 

தமிழில் : கி.இலக்குவன்

No comments: