Friday, May 15, 2009

திவாலாகிப்போன அமெரிக்கக் கொள்கைகள்

சி.இராமலிங்கம்

இன்றைக்கு உலகத்திலேயே மிகப்பெரிய கடன்கார நாடாக திகழும் ஒரு நாடு இருக்கிறதென்றால் அது அமெரிக்காதான். கடந்த அக்டோபர் 2008 வரை அமெரிக்க அரசின் கடன் 10.54 டிரில்லியன் டாலர்கள் (ஒரு டிரில்லியன் என்பது 1 லட்சம் கோடி) அமெரிக்காவின் மொத்த ஜனத்தொகை 30 கோடிக்கு மேல் இந்தக் கடனை ஒவ்வொரு அமெரிக்கருக்கும் பகிர்ந்து கொடுத்தால் 34, 536.52 டாலர்கள். தற்பொழுது சராசரியாக ஒரு நாளைக்கு 3.84 பில்லியன் டாலர்கள் கூடிக்கொண்டிருக்கிறது. இந்த சூழ்நிலை யார் ஆட்சிக்கு வந்தாலும் அதிகரிக்கச் செய்யுமே தவிர குறையாது என்று அமெரிக்காவின் கடன் கடிகாரம்(ருளு சூயவiடியேட னநவெ உடடிஉம) அறுதியிட்டுக் கூறுகிறது.

இந்த நிலைமைகள் உருவாக அமெரிக்காவின் அரசியல், பொருளாதார, நிர்வாக கொள்கைகள்தான் என்ற முடிவுக்கு வரலாம். உலகத்தில் தாராளமயத்தின் மூலம் நாடுகளுக்கு சுபிட்சம் வரும் என்பதும், உலகத்தில் இல்லாத நிர்வாகத் திறமை அமெரிக்க நிறுவனங்களுக்கு உண்டு என்பதும், அரசு கொடுக்கும் மானியங்களால் நாடுகள் சரிந்து விழுந்துவிடும் என்பது போன்ற பல அமெரிக்க உபதேசங்கள் தன்னுடைய சொந்த நாட்டிற்கே பயன்படாமல் அந்தக் கொள்கைகள் எல்லாம் திவாலாகிப் போனதைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

வங்கிகள், இன்சூரன்ஸ் நிறுவனங்களை அமெரிக்கப் பாணியில் நிர்வகிக்க ஏனைய நாடுகளுக்கு பயிற்சி கொடுத்து அதன் மூலம் கொள்ளை லாபத்தை அடையும் நிறுவனங்களை வைத்திருக்கும் அமெரிக்கா உலகத்திலேயே முதன்மையான கடன்கார நாடாக மாற என்ன காரணம்? வங்கிகளும், இன்சூரன்ஸ் கம்பெனிகளும் நூற்றுக்கணக்கில் திவாலாகிக் கொண்டிருக்கும் நிலை எதனால் ஏற்பட்டது? ஒரு சிலரை ஒரு சில நேரத்தில் ஏமாற்றலாம். ஆனால் எல்லோரையும் எல்லா நேரத்திலும் ஏமாற்ற முடியாது என்பதற்கு அமெரிக்கா ஒரு உதாரணம்.

இன்றைக்கு உலகப்பொருளாதாரம் உருகி கரைந்துக் கொண்டிருக்கிற நிலையில் சீனா உள்நாட்டின் நிதிக் கட்டமைப்புகளை மாற்றியமைத்து நிரந்தர தீர்வுக்கு வழி காண்பதில் முனைப்பாக உள்ளது. அமெரிக்காவில் மனித உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது என்பது எந்த காலத்திலேயே செத்தொழிந்துவிட்டது. ஒரு கணவன், ஒரு மனைவி என்பது அதிசயமாக பார்க்கக்கூடிய நிலை. பணத்திற்கு அடிமையான ஒரு சமுதாயத்தில் அம்மா, அப்பா, குழந்தைகள் என்பதெல்லாம் இரயில் சிநேகிதங்களைப் போல் மாறிவிட்ட நிலையில் அன்பும், அரவணைப்பும் கூட டாலர்களில் புதைந்து போய் இருக்கிறது. ஒரு நாட்டின் கொள்கைகளையே வியாபாரிகளால் தீர்மானிக்கப்படும் ஒரு நாட்டில் குடும்ப உறவுகளே வியாபார ரீதியாகத்தான் இருக்கும். இத்தகைய ஒரு கலாச்சாரம் இந்தியாவிலும் பரவி வருகிறது. அமெரிக்க மோகத்தால் பின்பற்றப்படும் அமெரிக்க கலாச்சாரத்தின் தாக்கமே இத்தகைய செயல்பாடுகளுக்குக் காரணம்.

கொள்ளை லாபத்திற்காகவும், சொந்த நாட்டின் நலன்களுக்காகவும் தன்னுடைய அசுர பலத்தை பயன்படுத்தி எண்ணெய் வள நாடுகளை துண்டாடுவதும், அழித்தொழிப்பதும், ஆக்கிரமிப்பு செய்வதும், அதற்காக பல லட்சம் கோடி டாலர்களை செலவு செய்வதும், தனது நாட்டின் மிருகத்தனமான இராணுவத்தை கட்டவிழ்த்துவிட்டு குழந்தைகள், பெண்கள், வயோதிகர், அப்பாவி மக்களை மனிதாபிமானமில்லாமல் கொன்று குவித்து தனக்கு சாதகமான அரசுகளை உருவாக்குவதை வழக்கமாகக் கொண்டுள்ள அமெரிக்காவின் ஜம்பம் எத்தனை நாளைக்கு? உலகத்திலேயே மிகப்பெரிய ஜனநாயகம் திளைக்கின்றது என்று சொல்லப்படுகின்ற நாட்டின் கொள்கைகள் உலகத்தில் ஜனநாயக நாடுகளை அழித்தொழிக்க முற்படுவது எந்த ஜனநாயகத்தைச் சேர்ந்தது?

போருக்காக செலவிடப்படும் ஒரு சிறுதொகைக்கூட எத்தியோப்பியா, சோமாலியா போன்ற நாடுகளின் வறுமையைப் போக்கிவிடும். இது அமெரிக்காவின் கண்களுக்குத் தெரியவில்லையா? உலகத்தின் மனிதாபிமானமில்லாத செயல்கள் என்று ஒரு நூறை தேர்வு செய்தால் அத்தனைக்கும் சொந்தக்காரர்களாக இருப்பவர்கள் அமெரிக்க ஆட்சியாளர்களாகத்தான் இருப்பார்கள். ஆனால் உலகத்தின் மனித உரிமைகள் காப்பாற்றப்படுவதற்கு தத்துப் பிள்ளைகள் போல் பறைசாற்றிக் கொள்பவர்களும் இவர்கள்தான்.

உலகத்தில் தனது செல்வாக்கை நிலைநிறுத்தப் பயன்படும் கருவி அந்த நாட்டின் இராணுவமும், அதிநவீன யுத்த தளவாடங்களும். இதை பராமரிப்பதற்கும், பாதுகாப்பதற்கும் அமெரிக்கா செலவிடும் தொகை கணக்கிலடங்காது. யுத்தத்திற்கும், யுத்த முஸ்தீபுகளுக்கும் செலவிடப்படும் தொகையும் கொஞ்சம் நஞ்சமல்ல. எத்தனை குபேர புரியாக இருந்தாலும் எவ்வளவு நாளைக்குத் தாங்கும்? அந்த பலாபலனை அனுபவிக்க அமெரிக்கா தொடங்கியிருக்கிறது. இந்த நெருக்கடியில் இருந்து மீள அமெரிக்கா என்னவிலை கொடுக்க வேண்டியிருக்குமோ... பொறுத்திருந்து பார்ப்போம்.

1 comment:

Anonymous said...

நல்ல பதிவு, வாழ்த்துக்கள்!
அமெரிக்காவை நம்பாத வியாபார முறைகளை நாம் உருவாக்க வேண்டும்!