Saturday, February 7, 2009

நாசகர கொள்கையின் புதிய ‘தொழில்நுட்பங்கள்’

அதுல். இவருக்கு வயது 28. பண்டங்களின் ஊகவணிகச்சந்தையில் லட்சக்கணக்கில் முதலீடு செய்தார். அதில் 25 லட்ச ரூபாய்க்கு மேல் வட்டிக்கு கடன் வாங்கியிருந்தார். ஒட்டுமொத்த முதலீடும் நஷ்டமாகியுள்ளது.

ரகுநாத். வங்கியில் பணியாற்றும் இளைஞர். பங்குகளில் வர்த்தகம் செய்யும் நோக்கத்துடன் 18 லட்சம் ரூபாய் கடன் வாங்கினார். பங்குச்சந்தை சரிவு ஏற்பட்டதால் அவருடைய முதலீடுகள் காணாமல் போயின. 

அபிஜித். வயது 23. கணினித்துறை நிறுவனம் ஒன்றில் நல்ல வேலையில், கைநிறைய சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தார். பங்குகளை வாங்குவதற்காக 10 லட்சம் ரூபாய் கடன் வாங்கினார். பொருளாதார நெருக்கடியால் அவரது வேலையே பறிபோயுள்ளது.

நெருக்கடியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆலோசனை வழங்க தலைநகர் டில்லியில் பல மையங்கள் துவங்கப்பட்டுள்ளன. இவர்களைப் போன்ற, இன்னும் மோசமான அனுபவங்கள் இந்த மையங்களில் பரிமாறிக் கொள்ளப்படுகின்றன. அதோடு, எப்போதும் இல்லாத அளவிற்கு ஆலோசனை பெறுவதற்காக கூட்டம் அலைமோதுகிறது. அவ்வாறு வருபவர்களில் பெரும்பாலான நபர்களின் கடைசிக்கேள்வியே இதுவரை அடைந்த நஷ்டத்திற்கு மீட்புத்திட்டம் ஏதாவது வருவதற்கான வாய்ப்புகள் உள்ளனவா என்பதுதானாம். 

மேற்கூறிய மூன்று இளைஞர்களைப் போன்றவர்களின் எண்ணிக்கைதான் ஆலோசனை பெற வருபவர்களில் அதிகமானதாகும். ஒரு கடனை அடைப்பதற்காக கூடுதல் வட்டிக்கு வேறொரு இடத்தில் கடனை வாங்கி அடைத்து பிரச்சனையைத் தள்ளிப்போட முயற்சித்தவர்களும் அங்கு ஏராளம். இத்தகைய ஆலோசனை வழங்கும் மையங்கள் வெளிநாடுகளில் சர்வசாதாரணமாகக் காணப்படும் ஒன்றாகும். அங்கு தங்கள் சேமிப்புகளை, முதலீடுகளை இழந்து நடுத்தெருவுக்கு வருவது அதிகம் என்பதே இதற்குக் காரணமாகும்.

இந்தியாவில் புதிய பொருளாதாரக் கொள்கைகள் அறிமுகமானதற்குப் பிறகுதான் இத்தகைய மோசமான சம்பவங்கள் அதிகமாகிவிட்டன. குறிப்பாக, நடுத்தர வருமானத்தைக் கொண்டவர்கள், வயதானவர்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். இதனால்தான் இதுவரை கண்ணில் படாத ஆலோசனை மையங்கள் இந்தியாவிலும் ஆங்காங்கே உருவாகி வருகின்றன. மும்பை, சென்னை, வார்தா, அகமதாபாத், ஐதராபாத், கான்பூர், கொல்கத்தா மற்றும் லூதியானாவில் இந்த மையங்கள் துவக்கப்பட்டுள்ளன. 

மக்களின் துயர் பெருகப் பெருக இத்தகைய மையங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே செல்லும். கடன் வலையில் இருந்து மீள்வதற்கும் இந்த மையங்களில் ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன. 25 லட்சம் மற்றும் 50 லட்சம் என்று தங்கள் பணத்தைத் தொலைத்துவிட்டு மையங்களுக்குள் நுழைந்து தலையில் கைவைத்து உட்கார்ந்து கொள்கிறார்களாம். இப்போதைக்கு பாங்க் ஆப் இந்தியா(அபய்) மற்றும் ஐசிஐசிஐ(திஷா) ஆகிய இரு வங்கிகளும் ஆலோசனை மையங்களைத் திறந்து வைத்துள்ளன.

திஷா ஆலோசனை மையத்தைச் சேர்ந்த நூடன் லுகானி கூறுகிறார். இளைஞர்கள் பாதிக்கப்படுவதற்கு சேமிக்க வேண்டும் என்ற எண்ணமே அவர்களுக்கு இல்லாததுதான். நுகர்வுக்கலாச்சாரத்தால் செலவு செய்வது மட்டுமே தங்கள் வேலை என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இதனால்தான் தங்கள் வேலையை இழந்துவிட்டாலோ அல்லது சந்தை சரிந்து விட்டாலோ அதற்குப் பிறகு என்ன செய்வதென்றே அவர்களுக்குத் தெரியவில்லை என்கிறார். 90களில் நடைமுறைக்கு வந்த மக்கள் விரோதப் புதிய பொருளாதாரக் கொள்கையின் பிரதான நோக்கமே மக்களை சேமிக்க விடாமல் செலவு செய்ய வைப்பதுதான். திட்டமிடலையே ஒழித்துக் கட்டிய பெருமை புதிய பொருளாதாரக் கொள்கையைச் சாரும்.

ஆலோசனை மையங்கள் போன்ற புதிய தொழில்நுட்பங்களை(!) புதிய பொருளாதாரக் கொள்கை தந்துள்ளது. ஆயுள் காப்பீடு பாலிசி முதிர்ச்சியடைந்தால் சம்பந்தப்பட்ட அலுவலகத்திற்கு போகாமல் வழக்கறிஞரைப் போய்ப் பார்க்கும் வழக்கம் மேலை நாடுகளில் உள்ளன. அத்தகைய தொழில்நுட்பங்களையும் விரைவில் நமது பொருளாதாரப் புலிகள் வழங்கினாலும் ஆச்சரியமில்லை. கேட்டால் அந்தத் துறைகளில் வேலைவாய்ப்பைப் பெருக்கி விட்டோம் பாருங்கள் என்று பெருமையடித்துக் கொள்வார்கள்.

No comments: