Monday, August 30, 2010

பணக்காரர்களை கொழுக்க வைக்கும் வளர்ச்சி

-மணிசங்கர் அய்யர் எம்.பி

மத்திய திட்டக்குழுவில் உள்ளவர்கள் நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சிவீதம் என்பதை மட்டுமே மூல மந்திரமாக ஜெபித்துக் கொண்டிருக்கிறார்களே தவிர, அதை எப்படி அமல் செய்வது , அதன் பலனை யார் அனுபவிப்பது என்பதில் எல்லாம் அக்கறை இல்லாமல் இருக்கிறார்கள். இதன் விளைவாகவே நாட்டின் வளர்ச்சி என்பது மக்களின் அனைத்துத் தரப்பினரும் பங்கேற்கும் வளர்ச்சியாக இல்லாமல், பணக்காரர்கள் மட்டும் மேலும் பணக்காரர்களாக கொழுக்கும் வளர்ச்சியாக உருவெடுத்து விட்டது. இப்போதுள்ள அரசின் திட்டங்களால் எந்த அளவுக்கு விரைவாக வளர்ச்சியை எட்டுகிறோமோ அந்த அளவுக்கு விரைவான ஏற்றத்தாழ்வையும் அடைகிறோம். நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சி வீதம் அதிகரித்துக் கொண்டே வரும் அதே வேளையில், வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழும் ஏழைகளின் எண்ணிக்கையும் அதே வேகத்தில் அதிகரித்துக் கொண்டே வருகிறது. பிரதமர் மன்மோகன் சிங்குக்கு பொருளாதார ஆலோசகராக இருக்கும் எஸ்.ஆர்.டெண்டுல்கர் போன்றவர்களுக்கு நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சி வீதம்தான் முக்கியமே தவிர, அனைத்து தரப்பினரும் அடையும் வளர்ச்சியில் அக்கறை இல்லை.

ஒரிசாவில் படிப்பறிவில்லாத, கந்தை ஆடை உடுத்தியுள்ள, அழுக்குப்படிந்த பழங்குடிகளிடமிருந்து கனிம வளம் நிறைந்த நிலத்தை அடிமாட்டு விலையில் வாங்கி கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்து விடலாம் என்று கணக்கு போட்டு உள்நாட்டு, வெளிநாட்டுத் தொழிலதிபர்கள் கூட்டாகச் செயல்பட்டனர். சுற்றுச்சூழலியலாளர்கள் எச்சரித்ததை அரசு அலட்சியம் செய்தது.

கடந்த ஆட்சியில் விவசாயக் கடனால் தற்கொலை செய்து கொண்ட லட்சக்கணக்கான விவசாயிகள் அரசுடைமை வங்கிகளில் வாங்கியிருந்த 70,000 கோடி ரூபாய் கடனைத் தள்ளுபடி செய்த போது நாடு முழுக்க பலத்த கண்டனம் எழுந்தது. இப்போதோ

10 நாள்கள் மட்டுமே நடந்து முடியவிருக்கும் காமன் வெல்த் விளையாட்டுப் போட்டிகளுக்காக தில்லி நகரில் மட்டும் 70,000 கோடி ரூபாயைச் சூறைவிடுகிறது அரசு. கடந்த 15 ஆண்டுகளில் கல்வி, சுகாதாரம், அடிப்படை சமூகத் தேவைகளுக்காக மத்திய அரசு ஒதுக்கும் நிதி 15 மடங்குக்கும் மேல் (அதாவது 1500 சதவீதம்) அதிகரித்திருக்கிறது, ஆனால் மனித ஆற்றல் வளர்ச்சியில் இந்தியாவுக்குக் கிடைத்திருப்பதோ 134-வது இடம்தான். நம்முடைய பொருளாதாரக் கொள்கைகளும், திட்டமிடலும், திட்ட அமலும் சரியாக இல்லை என்பதையே இவையெல்லாம் உணர்த்துகின்றன.’

-தில்லியில் ஆகஸ்டு 24-ந் தேதி நடந்த பி.எஸ். பார்க்கர் நினைவு சொற்பொழிவில் நிகழ்த்திய உரையிலிருந்து.

No comments: