Wednesday, February 4, 2009

பொதுத்துறைக்கு அதிகரிக்குது மவுசு

அமெரிக்க முதலாளித்துவ நெருக்கடி சர்வதேச அளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவிலும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தாலும் பொதுத்துறையின் அருமையை மக்கள் அறிந்து கொள்ளும் வாய்ப்பாகவும் இருந்துள்ளது. தனியார் நிறுவனங்கள் தொடர்ந்து சரிந்து வருவதால் தங்கள் பணத்துக்கு பாதுகாப்பே பிரதானம் என்பதால் பொதுத்துறை வங்கிகளை நாடிச்செல்லும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டில் பொதுத்துறை வங்கிகளின் வளர்ச்சி விகிதம் நன்றாக இருந்தது. 34.1 சதவீதமாக இருந்த தனியார் வங்கிகளின் வளர்ச்சி 12.1 சதவீதமாகவும், 26.9 சதவீதமாக இருந்த இந்தியாவிலிருந்து இயங்கும் அந்நிய வங்கிகளின் வளர்ச்சி 13.4 சதவீதமாகவும் குறைந்துள்ளது.

பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க பணப்புழக்கம் அதிகரிக்கப்பட வேண்டும் என்று மத்திய ரிசர்வ் வங்கி முடிவெடுத்தது. இதற்காக கடன் வட்டி மற்றும் ரொக்கக் கையிருப்பு விகிதம் ஆகியவற்றைக் குறைத்தது. இதையடுத்து கடன் வழங்குவதற்கான முதன்மை வட்டி விகிதத்தை 1.5 சதவீதம் வரை பொதுத்துறை நிறுவனங்கள் குறைத்தன. தனியார் நிறுவனங்கள் வெறும் 0.5 சதவீதம் மட்டுமே குறைத்தது. இதற்கும் மேலாக, அந்நிய வங்கிகளோ வட்டிவிகிதத்தைக் குறைக்கவே மாட்டேனென்று பிடிவாதமாக நின்றுவிட்டது. வட்டிவிகிதத்தை பொதுத்துறை வங்கிகள் குறைத்தாலும் வட்டி வருமானத்தில் 50 சதவீத வளர்ச்சியைக் காண முடிந்துள்ளது. ஆனால் போதிய அளவு குறைக்காத தனியார் வங்கிகளும், குறைக்கவே செய்யாத அந்நிய வங்கிகளும் பொதுத்துறை வங்கிகளை விடக்குறைவான வளர்ச்சியையே அடைந்துள்ளன.

கடன் வழங்குவதிலும் பொதுத்துறை நிறுவனங்கள் வளர்ச்சியை சந்தித்துள்ளன. இந்த வங்கிகள் 8.8 சதவீத வளர்ச்சியைச் சந்தித்துள்ள வேளையில், தனியார் வங்கிகள் 13.8 சதவீதமும், அந்நிய வங்கிகள் 12.4 சதவீதமும் பின்னடைவைச் சந்தித்துள்ளன. இந்திய வங்கிகளின் செயல்பாடு குறித்து முதலாளிகள் சங்கமான அசோசெம் ஒரு ஆய்வை மேற்கொண்டது. 25 பொதுத்துறை வங்கிகளும், 10 தனியார் வங்கிகளும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. கிட்டத்தட்ட அனைத்து அம்சங்களிலுமே தனியார் மற்றும் அந்நிய வங்கிகளை விட பொதுத்துறை வங்கிகள் நன்றாக இயங்கியுள்ளன என்பதுதான் ஆய்வு தரும் செய்தியாகும். நிகர வருமானத்தில் மட்டுமில்லாமல், வராக்கடன்களைக் குறைப்பதிலும் பொதுத்துறை வங்கிகள் நன்கு செயல்பட்டுள்ளன.

அதேபோல் நெருக்கடியான நேரத்திலும் உத்தரவாதமான வருமானத்தைத் தரும் என்று உறுதிமொழியைத் தருவதில் பொதுத்துறை எல்.ஐ.சி. முன்னணி வகித்துள்ளது. சமீபத்தில் அந்நிறுவனம் வெளியிட்ட ஜீவன் ஆஸ்தா திட்டம் லட்சக்கணக்கான முதலீட்டாளர்களை ஈர்த்துள்ளது. இந்தத்திட்டத்தின் மூலம் மட்டும் 9 ஆயிரம் கோடிக்கு மேல் எல்.ஐ.சியால் திரட்ட முடிந்திருக்கிறது. நிதி நிறுவனங்கள் மீதான நம்பகத்தன்மையை குலைக்கும் வகையில் பல்வேறு நாடுகளில் நிலைமை மோசமாகியுள்ள

போதிலும் இந்தியப் பொதுத்துறை வங்கிகள் மீதான நம்பகத்தன்மை குலையவில்லை. மாறாக, அத்தகைய நம்பகத்தன்மை அதிகரித்துள்ளது என்பதைத்தான் வங்கிகளின் கூடுதல் வருமானம் மற்றும் எல்.ஐ.சியின் திட்டத்திற்கு கிடைத்துள்ள வரவேற்பும் காட்டுகிறது.

நிதித்துறை நிறுவனங்களின் மீதான நம்பிக்கை வளர்ந்துள்ளது ஒரு புறம். மறுபுறத்தில் பொதுத்துறை நிறுவனங்களில் வேலைக்குச் சேர விரும்புபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. தனியார் நிறுவனங்களைத் தேடி ஓடிக்கொண்டிருந்த இளைஞர் கூட்டம், நெருக்கடி நேரத்தில் தலைநிமிர்ந்து நிற்கும் பொதுத்துறை நிறுவனங்களை நல்ல அந்தஸ்து அளிக்கும் இடமாகப் பார்க்கின்றனர். நடப்பு நிதியாண்டில் நாடு முழுவதும் பல்வேறு பணியிடங்களுக்காக

30 ஆயிரம் பேரை நாங்கள் தேர்வு செய்தோம். இதற்காக 24 லட்சம் பேரிடமிருந்து விண்ணப்பங்கள் வந்திருந்தன என்கிறார் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் துணைப் பொது மேலாளர் டி.ஜகதீஷ் பாபு.

மெரிட்டிராக் என்ற மனிதவள மேம்பாட்டு நிறுவனத்தின்

தலைவராக இருக்கும் படாகி, பொதுத்துறையில் பணியாற்றுவது குறித்த மக்களின் கருத்தில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்தக்கருத்து உருவாக்கம் நெருக்கடியையும் மீறியது. நெருக்கடி அம்பலமாகும் முன்பே இந்த மாற்றம் ஏற்பட்டுவிட்டது என்கிறார். பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், பிஎச்இஎல், பிஇஎல், என்டிபிசி, ஓஎன்ஜிசி உள்ளிட்ட

பல நிறுவனங்களிலும் சேருவதற்கு திறமையானவர்கள் படையெடுக்கிறார்கள். இதைப் பயன்படுத்திக் கொள்ள பொதுத்துறை நிறுவனங்களும் தயாராகவே இருக்கின்றன.

No comments: